பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

விந்தன் கதைகள்

வைத்துவிட்டு, வழக்கம்போல் அடுத்த அறையில் தனியே படுத்துக் கொள்வதற்காகத் திரும்புவேன். எப்பொழுதாவது ஒரு நாள், “என்ன அவ்வளவு அவசரம்?’ என்பார் அவர்-அதுவும் அன்புடன் அல்ல; அதிகாரத்துடன்தான்!

இந்த அழகான கேள்வியின் அர்த்தம், நான் அவருடன் கொஞ்ச நேரம் இருக்கவேண்டும் என்பதுதான்.

குறிப்பறிந்து நானும் என்னையறியாத நடுக்கத்துடனும் பயத்துடனும் அவரை நெருங்குவேன்.....

இப்படிப்பட்ட வாழ்க்கையில்தான் நான் இன்று இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராக விளங்குகிறேன்.

இவ்வளவு துன்பங்களையும் நான் எதற்காகச் சகித்துக் கொண்டிருக்கவேண்டும்?

வயிற்றுச் சோற்றுக்காகவா?

இல்லை; அதைப் பற்றி நாய்கூடக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பின் எதற்காக? ‘பெண்ணாய்ப் பிறந்ததற்காக!”

  • * *

வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். ஆனால் அவருடைய சட்டதிட்டங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் கட்டுப்படுத்தாது. அவர் வீட்டில் இல்லாத வேளையில் அவருடைய சட்டதிட்டங்களை அமுல் நடத்தி வைக்கவும், அவசியமானால் அவசரச் சட்டங்கள் போடவும் என் மாமியார் இருந்தாள். நான் எந்த மாதிரிப் புடவை கட்டுவது, எந்த மாதிரி ரவிக்கை போடுவது என்பதுபோன்ற விஷயங்களில் கூட என் மாமியாரின் சட்டதிட்டங்கள்தான் செல்லும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அவளுடைய குணவிசேஷத்தைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அதாவது, அவர் என்னை எவ்வளவுக் கெவ்வளவு படுத்துகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுக்குத் திருப்தி! - அவளுடைய மனோபாவம் அப்படியிருக்கும்படியாக நான் அவளுக்கு என்ன தீங்கு செய்தேனோ, தெரியவில்லை.

இத்தனைக்கும் என்னுடைய கல்யாணத்திற்கு முன்னால் நான் யாரோ, அவள் யாரோ? ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் ஏதாவது பழைய மனத்தாங்கல் இருப்பதற்குக் காரணமிருக்கலாம்.