பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாட்டுத் தொழுவம்

137

இப்போதுதானே அவளை எனக்கும் என்னை அவளுக்கும் தெரியும்? அதற்குள் என்னிடம் ஏன் அவளுக்கு அத்தனை வெறுப்பு?

பார்க்கப் போனால் பிறக்கும்போதே அவள் மாமியாராகப் பிறந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவளும் இன்னொரு மாமியாரின் கீழ் மருமகளாய்த்தான் வாழ்ந்திருக்க வேண்டும். இப்பொழுது என் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் அப்பொழுது அவள் உள்ளத்திலும் தோன்றியிருக்க வேண்டும்; நான் இன்று அனுபவிக்கும் கஷ்டத்தை அவளும் அன்று அனுபவித்திருக்க வேண்டும்; நான் அடையும் வேதனையை அவளும் அடைந்திருக்க வேண்டும்; நான்காணும் கனவுகளையெல்லாம் அவளும் கண்டிருக்க வேண்டும்; என்னைப் போல் இளமையின் ஆசைக் கடலில் வீழ்ந்து அவளும் ஒரு காலத்தில் தத்தளித்திருக்க வேண்டும்; துன்பத்தைக் கண்டு துடித்து, இன்பத்தை நினைத்து ஏங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. அவள் கடவுளைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறாள். இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக நானும் அவளைப் போல் ஜபமாலை உருட்டி வெறும் வேஷதாரியாக வேண்டுமா. வீட்டுக் காரியங்களைத் தவிர இந்த ஜன்மத்தில் எனக்கு வேறொன்றும் வேண்டாமா? இதற்குத் தானா நான் இவளுடைய வீட்டுக்கு வந்தேன்? அப்படியானால் என்னுடைய பிறந்தகத்திலேயே எவ்வளவோ காரியங்கள் நான் செய்வதற்கு இருக்கின்றனவே!

தினசரி என்னுடன் சண்டையிடுவதற்கு அவள்தான் எத்தனை சந்தர்ப்பங்களைச் சிருஷ்டி செய்து கொள்கிறாள்- ‘சந்தர்ப்பங்களை நோக்கி நான் காத்திருக்க மாட்டேன்; நானே வேண்டும்போது அவற்றைச் சிருஷ்டி செய்து கொள்வேன்’ என்று சொன்ன வீராதி வீரன் நெப்போலியன்கூட இவளிடம் ராஜதந்திரத்துக்குப் பிச்சை எடுக்க வேண்டும் போலிருக்கிறதே!

* * *

டைவேளையில் எப்பொழுதுதாவது ஒரு நாள் எதிர் வீட்டு அகிலா எங்கள் வீட்டுக்கு வருவாள். எனக்கும் அன்று அழுக்குத் துணிகளைத்துவைத்துப் போடும் வேலையில்லாமலிருந்தால், சிறிது நேரம் அவளுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். அவள் தன் கணவருடன் சேர்ந்து நடத்திய ஊடல், காதல் இவைகளைப் பற்றியெல்லாம் என்னிடம் வெறி பிடித்தவள் போல் சொல்வாள். அப்புறம் அவளும் அவளுடைய கணவரும் சேர்ந்து கண்டு களித்த