பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாட்டு தொழுவம்

139

வந்திருந்தாள். அவளிடம் இவள் என்னவெல்லாம் சொல்கிறாள், தெரியுமா? என்னைத் தொலைத்துத் தலை முழுகுவதற்கு இவள் பாக்கியம் செய்ய வில்லையாம். நான் ஒருத்தி இன்னும் உயிரோடிருப்பது இவளுக்குத் தொந்தரவாயிருக்கிறதாம். எந்நேரம் பார்த்தாலும் இவளைப் பிடுங்கித் தின்றபடி இருக்கிறேனாம். நான் இல்லாவிட்டால் இவள் இஷ்டப்படி எவளோடாவது, எவனோடாவது பேசிக் கொண்டிருக்கலாமோ, இல்லையோ?” என்றெல்லாம் சொல்லி ஒலமிட்டு அழுதாள்.

அவருக்குத்தான் தம்முடைய தாயார் வாக்கு வேதவாக்காச்சே, உடனே கிளம்பிவிட்டார். “ஓஹோ அவ்வளவு தூரத்துக்கு வந்து விட்டாளா? ஆமாம், 'பேய்க்கு இடம் கொடுத்தாலும் கொடுக்கலாம்; பெண்ணுக்கு இடம் கொடுக்கக் கூடாது’ என்று பெரியோர்கள் தெரியாமலா சொன்னர்ர்கள்? அந்த எதிர் வீட்டுக்காரி இங்கே வருவதற்கும், அவளுடன் இவள் அரட்டையடிப்பதற்கும் கொஞ்சம் இடம் கொடுத்ததால் வந்த வினை இது நாளையிலிருந்து ஆகட்டும், அந்த அகிலாவின் அகமுடையானிடம் சொல்லி அவளை இங்கே வரவிடாமல் செய்து விடுகிறேன்" என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு என்னவோ போலிருந்தது. அது என்ன காரணமோ, என்னைத்தான் அவர் வெளியே போக விடுவதில்லை. இந்த விஷயத்தில் நானும் எங்கள் வீட்டுப் பசுவும் ஒன்று. அதையும் நாங்கள் இருந்தது நகரமானதால் ஒரு நாளும் தனியாக அவிழ்த்து விடுவதில்லை. எப்பொழுதாவது ஒரு நாள் சற்று காலாறுவதற்காக அவர் அதை வெளியே ஒட்டிக் கொண்டு செல்வார். அதே மாதிரிதான் நானும். ஏதாவது கல்யாணம். கார்த்திகைக்கு அவருடன் செல்வேன். அதுவும் அவருடைய அதிகார அழைப்புக்குப் பயந்துதான்-அன்பு, ஆசை, மண்ணாங்கட்டி, தெருப் புழுதி இதெல்லாம் தான் எங்கள் வாழ்க்கையில் மருந்துக்கும் கிடையாதே!-அப்படிப் போகும்போதுதான் நானும் சற்றுக் காலாற நடந்து செல்வேன். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கும் எங்கள் வீட்டுப் பசுவுக்கும் ஒரே வித்தியாசம் இருந்தது. திரும்பி வந்ததும் பசுவைக் கட்டிப் போட்டு விடுவார்கள்; என்னைக் கட்டிப் போட மாட்டார்கள்.

‘இந்த லட்சணத்தில் என் இருளடைந்த உள்ளத்தில் எப்பொழுதாவது ஒரு நாள் விளக்கேற்றி வைக்க வந்தவள் அகிலா ஒருத்திதான். அவளையும் இப்பொழுது தடுத்து விடுவதென்றால்....!