பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தையின் குதூகலம்

149

நல்ல வேளையாக, மாணிக்கம் பிள்ளையைப் பிடித்த ‘பைத்தியம்' கதிர்வேலு நாடாரையும் பிடித்து விடவில்லை. அவருக்குத் தம் கடமையைவிட உரிமைதான் எப்போதும் பெரிது!

தமக்கு உலகம் இன்னதென்று தெரிந்த நாளிலிருந்துஅதாவது, நாடார் கடைசியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து சூரியோதயத்தையோ, அதன் அஸ்தமனத்தையோ திருவாளர் மாணிக்கம் பிள்ளை அவர்கள் தம் வீட்டிலிருந்தபடி பார்க்கும் பாவத்தை ஒரு நாளாவது செய்தவர் அல்ல; எண்ணெய் மண்டியில் இருந்தபடிதான் பார்ப்பார். கடைச் சிப்பந்திகள் சட்டமோ, அவர் இருந்த திக்கைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த 'அதிர்ஷ்டம்’ என்று ஒன்று இருக்கிறதே, அது நம் மாணிக்கம் பிள்ளையை அடியோடு கைவிட்டு விட்டதென்றும் சொல்லிவிட முடியாது. ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அவருக்கு மணி ஒருவன் மட்டும்தான் உயிருடன் இருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அது மட்டுமா? தவறிப் போனதம் ஐந்து குழந்தைகளின் அடக்கத்தின் போதும் அவர் சூரியோதயத்தையும் அதன் அஸ்தமனத்தையும் தம்முடைய வீட்டிலிருந்தபடியே பார்க்கும் பாக்கியம் வேறு கிடைத்தது.

தன் தகப்பனார் வேலைக்குப் போகும்போதும், வீடு திரும்பும்போதும் மணிதுக்கத்தில் ஆழ்ந்திருப்பான். ஆகவே, அன்று வரை தந்தையும் மகனும் ஒருவரை யொருவர் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்து வந்தது.

"அப்பா எங்கே, அம்மா?" என்று அடிக்கடி அவன் தன் தாயாரைக் கேட்பதுண்டு. அவள், “வேலைக்குப் போயிருக்கிறார்!" என்பாள் ஒரு சமயம்; "ஊருக்குப் போயிருக்கிறார்!" என்பாள் இன்னொரு சமயம்; தொந்தரவ தாங்காமல் சில சமயம், “அப்பா இறந்து விட்டார்" என்று அவள் கொஞ்சங்கூடக் கூசாமல் சொல்லி விடுவதும் உண்டு.

இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு மணிக்கு அலுத்துப் போய் விட்டது. "அப்பா எப்படியாவது தொலைந்துபோகட்டும்; அவரைப் பற்றிய கவலையே நமக்கு வேண்டாம்!" என்று எண்ணியவனாய், அன்று அவன் தன் தாயாரை நோக்கி, "அம்மா! என்னை 'பீச்’ சுக்காச்சும் ஒரு நாளைக்குக் கூட்டிக்கிட்டுப் போயேன்!" என்றான்.