பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

விந்தன் கதைகள்

காதலென்றும், கத்தரிக்கா யென்றும் சொல்லிக் கொண்டு சுவைக்குதவாத ஒருத்தியின் கழுத்தில் மாலையிட்டேன். அதன் பலன்? இன்று நானும் அழுது வடிகிறேன்; அவளும் அழுது வடிகிறாள்!

அவனுடைய அர்த்தமில்லாத சிந்தனை அத்துடன் முடியவில்லை; இன்னும் மேலே மேலே சென்று கொண்டிருந்தது.

* * *

தன் கணவனின் மனக் குறையைக் குமுதமும் ஒருவாறு அறிந்துதான் இருந்தாள். ஆனாலும் அவள் அதற்காக என்ன செய்ய முடியும்?

பிறந்தகத்தின்நிலையை உத்தேசித்து, பின்னால் புக்ககத்தாரிடம் கேட்கப்போகும் வசவுகளையும் முன்னாலேயே ஒருவாறு உணர்ந்து, அவள் முதலில் தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றுதான் தன் பெற்றோரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள். அவர்களும் தங்கள் நிலையை உணர்ந்து, கல்யாண விஷயத்தில் அவளை அவ்வளவாக வற்புறுத்தாமல் தான் விட்டிருந்தார்கள். ஆனால், இரண்டு குடும்பங்களும் நெருங்கிப் பழக நேர்ந்ததின் காரணமாக, நாராயண மூர்த்திக்கும் குமுதத்திற்கும் இடையே நேசம் வளர்ந்தது. காவியங்களில் காணும் காதல் எல்லாம் வெறும் கற்பனை என்பதை அந்த ஜீவன்கள் உணரவில்லை. வாழ்க்கையில் அவன் கல்யாணம் ஆகுமுன், ‘கண்ணே, மணியே, கற்கண்டே! என்றதெல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் இருக்கும் என்பதை அப்பாவி குமுதம் அப்போது அறிந்திருக்கவில்லை.

குமுதத்தின் பெற்றோரும், நல்ல வேளையாக நாராயண மூர்த்திக்குத் தாயார், தகப்பனார் இல்லாததைக் கண்டு ஒருவாறு திருப்தி அடைந்தனர். ஏனெனில், ‘பின்னால் ஏதாவது ஏசிக் காட்டுவதா யிருந்தாலும் அவர்கள் இருந்தால்தானே’ என்று அவர்கள் நினைத்தனர். அதற்கேற்றாற் போல் நாத்தனார் என்று சொல்லிக் கொள்வதற்கும் யாரும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நாராயணமூர்த்தியின் சித்தப்பாவும், சித்தியும் கல்யாணமானதும் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆகவே, இவ்வளவு செளகரியமான இடம் போனால் வராது என்று எண்ணியவர்களாய் குமுதத்தின் பெற்றோர், கடனோடு கடனாகக் கல்யாணத்தைத் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு சீக்கிரத்திலேயே செய்து முடித்து விட்டனர்.