பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கைமேல் பலன்

171

சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் சற்றுத் துரத்தில் வருவது தெரிந்தது; அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது-சூரியனைக் கண்ட தாமரையைப் போல அல்ல; சோற்றைக் கண்ட ஏழையைப் போல.

அவள் அருகில் வந்தாள்; அவன் முகம் குவிந்தது!

ஏன் தெரியுமா? இத்தனை நாளும் அவளுடைய முகத்தில் ஒருவிதக்களை இருக்குமே, அந்தக் களையை இன்று காணவில்லை; இத்தனை நாளும் அவளுடைய கையில் சாதம் இருக்குமே, அந்தச் சாதத்தையும் இன்று காணவில்லை!

"இன்னிக்குத் திடீரென்று அய்யர் வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிங்க வந்துட்டாங்க, அதாலே ஒண்ணும் கிடைக்கலே!” என்று சொல்லி வருத்தத்துடன் கையை விரித்தாள் செல்லம்.

"அதுக்குத்தான் என்ன பண்றது. தண்ணீர் இருக்கவே இருக்கு; யார் வீட்டுக்கு எத்தனை விருந்தாளிங்க வந்தாலும் நம்மை அது தாங்குமில்லே!" என்று சொல்லி, ஒரு வறட்டு சிரிப்புச் சிரித்தான் சின்னப்பன்.

"அப்படின்னா நான் வாரேன் ஏகப்பட்ட துணிங்க இருக்கு; தோய்ச்சுப் போடணும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள் செல்லம்.

"சரி, போய் வா! நானும் ‘மீட்டிங்'குக்குப் போறேன். இன்னிக்குப் பட்டணத்திலேயிருந்து யாரோ ஒரு பெரிய தலைவரு வந்து பேசப் போறாராம்" என்றான் சின்னப்பன்.

இருவரும் பிரிந்தனர்-நிரந்தரமாக அல்ல; தற்காலிகமாகத்தான்

* * *

அன்று மாலை செல்லம் விட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு வாசலுக்கு வந்து நின்றாள். சின்னப்பன் வந்தான்.

"வாங்க, பட்டணத்திலேயிருந்து வந்த தலைவரு என்ன சொன்னாரு?” என்று ஆவலுடன் விசாரித்தாள் செல்லம்.

சின்னப்பன் தலையைச் சொறிந்து கொண்டே, "அவர் நல்லதைத்தான் சொன்னாரு" என்றான். "என்ன, நல்லதைச் சொன்னாரு?” "இப்போ எங்கே பார்த்தாலும் தீப்பெட்டிக்குப் பஞ்சமாயிருக்குதில்லே? இந்தச்சமயத்திலே நீங்க ‘ஸ்ட்ரைக்' சேஞ்சி உற்பத்தியைக் குறைக்கலாமான்னு கேட்டாரு!”