பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலைக்காரி விசாலம்


னந்தகிருஷ்ணனுக்கு ஐந்து வயது. ஆனால் செல்வத்தின் காரணமாக அவன் ரொம்ப ரொம்பச் சின்னக் குழந்தையாகப் பாவிக்கப்பட்டு வந்தான். ஸ்ரீமான் ராமேஸ்வரனுக்கு அவன் ஏகபுத்திரன். வழக்கம் போல் அன்றும் மாலை வேளையில் அவனைத் தள்ளு வண்டியில் உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு சென்றாள் வேலைக்காரியான விசாலம்.

விசாலத்துக்கும் ஒரு குழந்தை இருந்தது. சேகரன் என்பது அவன் நாமதேயம். அவனுக்கும் ஏறக்குறைய ஐந்து வயதுதான் இருக்கும். ஆனால் வறுமையின் காரணமாக அவன் ரொம்ப ரொம்பப் பெரிய குழந்தையாகப்பாவிக்கப்பட்டு வந்தான். அம்மாவின் இடுப்புக்கூட் அவன் சவாரி செய்வதற்குக் கிடைப்பதில்லை. அது கூட அனந்த கிருஷ்ணனுக்குத்தான் அடிக்கடி உபயோகப்பட்டு வந்தது.

அன்று என்னவோ தெரியவில்லை; சேகருக்குத் தானும் தள்ளுவண்டியில் ஏறிக்கொண்டு சவாரி செய்யவேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது.

"அம்மா"
"ஏண்டா?”
"தள்ளு வண்டி, அம்மா!"

குழந்தை தன்னுடைய நிலைமை தெரியாமல் தனக்கும் ஒரு தள்ளு வண்டி வாங்கிக் கொடுக்கச் சொல்கிறானாக்கும் என்று நினைத்து விசாலம் சிரித்துக்கொண்டே, "ஆகட்டும்; நாளைக்கே ஒரு வண்டி வாங்கிவிடலாம்; அந்த வண்டியில் உன்னை உட்கார வைத்துத் தள்ளிக்கொண்டு செல்ல ஒரு வேலைக்காரியையும் வைத்துக் கொள்ளலாம்!" என்றாள்.

வாழ்க்கையில் அவ்வளவு நம்பிக்கை அற்றுப் போயிருந்தது அவள் உள்ளம்.

"இல்லை, அம்மா!" என்று தன் பிரேரணையில் ஒரு சிறு திருத்தம் கொண்டு வந்தான் பையன்.

"பின் என்னடா?" என்று அதட்டினாள் தாயார்.

வி.க. -14