பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

விந்தன் கதைகள்


அன்னையின் அதட்டலைக் கேட்டதும், அஸ்தமிக்கும் ஆதவனைக் கண்ட அல்லி மலரைப் போலக் குழந்தையின் வதனம் குவிந்து விட்டது.

தன் விருப்பத்தை வாய் மூலம் தெரிவிப்பதற்குக்கூட அஞ்சிய குழந்தை ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால் தள்ளு, வண்டியில் உட்கார்ந்திருந்த அனந்தகிருஷ்ணனைச் சுட்டிக் காட்டினான்.

அப்பொழுதும் விசாலத்துக்கு விஷயம் என்னவென்று தெரியவில்லை.

ஆனால் குழந்தையின் மனம் குழந்தைக்குத் தெரியுமோ என்னமோ, சேகரின் விருப்பத்தை அனந்தகிருஷ்ணன் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டான். உடனே வண்டியை விட்டுக் கீழே இறங்கி, "ஊம்...... ஏறிக்கோ!" என்றான்.

பரஸ்பரம் குழந்தைகள் தங்களுக்குள் இப்படி விட்டுக் கொடுத்துக் கொண்டதுகூட விசாலத்துக்குப் பிடிக்கவில்லை. பிடிக்காமற் போனதோடு மட்டும் இல்லை; அவளுக்குப் பயமாயும் இருந்தது-எஜமான் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? இந்த வேலையில்கூட மண்ணைப் போட்டுக் கொண்டு அப்புறம் எப்படிக் காலந் தள்ளுவது? இந்தச் சண்டாளன் வேலைக்கு எமனாயிருப்பான் போலிருக்கிறதே!

இப்படி அவள் எண்ணிக் கொண்டிருந்ததைக் குழந்தைகள் கவனித்ததாகத் தெரியவில்லை. அனந்த கிருஷ்ணன் ‘ஊம்' என்றதுதான் தாமதம்; சேகரன் ‘ஜம்’ என்று வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

விசாலம் பொறுமையை இழந்து விட்டாள். அவள் ஆத்திரத்துடன் சேகரனைத் தூக்கிக் கீழே விட்டுவிட்டு, "அனந்த், ஏறிக்கொள்!" என்றாள்.

"ஊஹாம்....மாட்டேன் கொஞ்ச தூரம் நான் நடக்கத் தான் போகிறேன்" என்று பிடிவாதம் பிடித்தான் அனந்தகிருஷ்ணன்.

சேகரன் அழ ஆரம்பித்து விட்டான்.

தாயாருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தாள்.