பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவன் கேள்வி

287


"நீங்க என்னத்துக்கு அந்த 'ஸ்டிரைக்'கைப் பத்தியே சும்மா பேசிக்கிட்டு இருக்கீங்க? நாலு பேருக்கு ஆகிறது நமக்கும்!"

“சரி, நான் போயிட்டு வரேன்"

"வரும்போது உங்க அப்பாவுக்கும் குழந்தைக்கும் ஏதாச்சும் தின்ன வாங்கிக்கிட்டு வாங்க!" என்றாள் முனியம்மாள்.

"ஆகட்டும்!" என்றுதுண்டை உதறித் தோளின் மேல் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான் கண்ணுச்சாமி.

* * *

ன்று மாலை கண்ணுச்சாமியின் தலையில் எதிர்பாராத விதமாக ஒரு பேரிடி விழுந்தது. அவனிடமிருந்து வழக்கம்போல் பழைய கடனை வாங்கிக் கொண்ட காபூலிவாலா புதுக் கடன் கொடுக்க மறுத்துவிட்டான். காரணம் என்னவென்று கேட்டதற்கு "நீங்க நாளைக்கு வேலை செய்யாம ஸ்டிரைக் பண்ணப் போறிங்க இல்லே, நான் இன்றைக்கே உங்களுக்குக் கடன் கொடுக்காம 'ஸ்டிரைக்' பண்ணிப்பிட்டேன்!" என்று அவன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டான்.

கண்ணுச்சாமிக்கோ சிரிக்கவுந் தோன்றவில்லை; அழவுந் தோன்றவில்லை; எவ்வித உணர்ச்சியுமின்றி அவன் அடிமேல் அடி எடுத்துவைத்து வெளியே வந்தான்.

ஒருகணம் நாலா திசைகளிலிருந்தும் இடியோசை கிளம்பிக் காதுகளைத் தாக்குவது போலவும், பூமி பிளந்து கால்கள் கீழே நழுவிச் செல்வது போலவும் அவனுக்குத் தோன்றிற்று.

அவ்வளவுதான்; அப்படியே உட்கார்ந்துவிட்டான். “...சாயந்திரம் சம்பளம் வந்து நாளைக்குப் போய் அரிசி வாங்கிக்கிட்டு வந்தாத்தான் அடுப்புப் புகையும்"

“வரும்போது உங்க அப்பாவுக்கும் குழந்தைக்கும் ஏதாவது தின்ன வாங்கிக்கிட்டு வாங்க!”

இந்த அபாய அறிவிப்புகளை நினைத்ததும் கண்ணுச்சாமிக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே எழுந்தான்; எழுந்து நடந்தான். எங்கும் நிற்கவில்லை; நடந்து கொண்டேயிருந்தான்.