பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவன் கேள்வி

291

ஆதாரங்கள் தேட முடியுமோ, அத்தனை ஆதாரங்களையும் தேடி எடுத்துக்காட்டி வாதித்தார்.

கடைசியில், சர்க்கார்தரப்பு வக்கீலின் கட்சி தான் ஜயித்தது!

நீதிபதி தமது தீர்ப்பை வாசித்தார் - கண்ணுச்சாமிக்கு ஏழு வருஷச் சிறைத் தண்டனை என்று!

இதைக் கேட்டதும் கண்ணுச்சாமி 'இடி இடி' என்று சிரித்துக் கொண்டே சொன்னான்:

"நல்ல வேடிக்கை ஐயா இது! எனக்கு வைச்ச வக்கீல் என்னடான்னா, நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காகக் குளத்திலே விழலேங்கிறதை நிரூபிக்கிறதுக்காக இத்தனை நேரமும் கரடியாக் கத்தினாரு. சர்க்கார் கட்சி வக்கீல் என்னடான்னா, நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காகத்தான் குளத்திலே விழுந்தேன் என்கிறதை நிரூபிக்கிறதுக்காக இத்தனை நேரமும் படாத பாடு பட்டாரு. ஆனா, ‘நான் என்னத்துக்காகத் தற்கொலை பண்ணிக்கப் போனேன்?' என்கிறதைப் பற்றி மட்டும் யாரும் விசாரிக்கலையே! - இல்லை நான் கேட்கிறேன் - இந்த கோர்ட்டுங்க எல்லாமே குற்றத்தை மட்டுந்தான் விசாரிக்குமா? குற்றத்துக்குக் காரணம் என்னன்னு விசாரிக்கவே விசாரிக்காதா?”

அதற்குமேல் கோர்ட் சேவகன் சும்மா நிற்கவில்லை; உஸ், ஸைலன்ஸ்!’ என்று உரத்துக் கூவினான்.