பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மவராசர்கள்

"ழியில் எந்தவிதமான ஆபத்தும் நேராமற்போய்ச் சேர வேண்டுமே, கடவுளே!" என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட வண்ணம் மாயவரம் ஜங்ஷனில் திருவனந்தபுரம் பாஸஞ்சர் வந்து நின்றது. தங்களுடைய பெட்டி படுக்கைகளுடன் ஜனங்கள் விழுந்தடித்துக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினர். அப்படி ஒடியவர்களில் பிரபல வியாபாரியான பீதாம்பர முதலியாரும் ஒருவர். அவர் தம்முடைய 'யுத்தகால தொந்தி'யைச் சுமக்க முடியாமல் சுமந்து சென்றது பார்ப்பதற்கு வேடிக்கையாயிருந்தது. அவரைப் பின்பற்றி அவருடைய மூன்றாவது மனைவி கையில் குழந்தையுடன் ஒட்டமும் நடையுமாக வந்தாள். அவர்கள் இருவரையும் தொடர்ந்து போர்ட்டர் ஒருவர் தலையில் பெட்டியுடனும் கையில் படுக்கையுடனும் முக்கி முனகி நடந்து கொண்டிருந்தான்.

ஏற்கனவே முதல் வகுப்பில் வேண்டிய இடத்துக்கு 'ரிஸர்வ்’ செய்துவிட்டு அப்புறம் சாவகாசமாக வந்து வண்டி ஏறுவதற்குரிய வசதி பீதாம்பர முதலியாருக்கு இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் சிக்கனத்தை உத்தேசித்து முதலியார் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வது வழக்கம். செளகரியமாக வாழ்வதற்கு வசதியிருந்தும் உலகத்தில் வாழத் தெரியாத எத்தனையோ பேர் இல்லையா? அவர்களில் முதலியாரும் ஒருவர் போலிருக்கிறது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். ஏனெனில், மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதற்கு முதலியார் சொல்லும் காரணமே வேறு. அந்தக் காரணம் என்ன தெரியுமா? மகாத்மா காந்தி மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து கொண்டிருந்தாராம்; அவரைப் பின்பற்றி நம் முதலியாரும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்கிறாராம்!

இவ்வாறு சொல்லிக் கொள்வதின் மூலம் முதலியார் தம்மை மகாத்மாகாந்திக்கு அடுத்த வாரிசாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த மகானைப் போலவே தாமும் ஏழைகளிடத்தில் இரக்கம் கொண்டவர் என்று அவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையோ வேறு விதமாயிருந்தது. ரயில் பிரயாணத்தில் தான் நம்முடைய முதலியார் காந்தி மகாத்மாவைப் பின்பற்றினாரே தவிர வாழ்க்கைப் பிரயாணத்தில் அவரைப் பின்பற்றவில்லை.