பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மவராசர்கள்

நான் கண்டேனா? அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இவனைக் கட்டாயம் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்துவிட வேண்டியதுதான்!” என்றார் முதலியார்.

நாச்சியப்பன் சிரித்துக் கொண்டே இருந்தான். "கொஞ்சம் பொறு; தம்பி! சும்மா சிரித்துக் கொண்டே இருக்கிறாயே!” என்றார் முதலியார் பல்லைக் கடித்துக் கொண்டு. அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது. வண்டியும் நின்றது. வண்டி நின்றதோ இல்லையோ ‘போலீஸ், போலீஸ்’ என்று கத்தினார் முதலியார். அவரைப் பின்பற்றி அவருடைய ரயில் நண்பர்கள் எல்லோரும் ‘போலீஸ், போலீஸ்’ என்று கூக்குரலிட்டனர்.

‘என்னமோ ஏதோ என்று இரண்டு போலீஸ் ஜவான்கள் அவர்கள் இருக்குமிடத்துக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர். நாச்சியப்பனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டி “இவன் அபின் வைத்திருக்கிறான்; இவனைப் பிடித்துக் கொண்டு போங்கள்!” என்று ஏக காலத்தில் எல்லோரும் காட்டுக் கத்தலாகக் கத்தினர்.

அப்பொழுதும் நாச்சியப்பன் அவர்கள் எதிர்பார்த்தபடி பதுங்கவுமில்லை; பயப்படவுமில்லை; தயங்கவுமில்லை, தாமதிக்கவுமில்லை. அமைதியுடன் எழுந்தான்; அலுப்புடன் குழந்தையைத்துக்கினான்.

பாவம் அளவுக்கு மீறிய அபின் மயக்கத்தால் அந்தக் குழந்தை இல்லிட்டுப் போயிருந்தது; அதனுடைய கடைசி மூச்சும் நின்றுவிட்டிருந்தது.

"இனிக் கவலை யில்லை; கடவுள் இப்பொழுது தான் என்னிடம் கருணை காட்டியிருக்கிறார்!" என்றான் நாச்சியப்பன்.

போலீஸார் அவன் கையைப் பற்றினர். "மவராசர்கள்! நல்லாயிருக்கணும். என்ன இருந்தாலும் கொஞ்ச காலம் எனக்கு வயிற்றுக் கவலை இல்லாமல் செய்த புண்ணியம் அவர்களைச் சேர்ந்தது தானே!" என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.