பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாறுதல் இல்லை

ங்கள் வீட்டுக்கு எதிரில்தான் அந்த மாரியம்மன் மைதானம் இருந்தது. ஒரு பெரிய மனிதருக்கு ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துக் கொடுத்ததன் பயனாக அந்த மைதானத்தை மாரியம்மன் ‘சன்மானமாகப் பெற்றிருந்தாள். சாதாரண மனிதர்களிடமிருந்து எந்தக் காரியத்தைச் சாதித்துக் கொண்டாலும் அந்தப் பெரிய மனிதர் ஏதாவது 'கூலி' கொடுத்துவிடுவது வழக்கம். பாவம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட மாரியம்மனும் அந்த வழக்கத்துக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஒரு வேளை மன்னாதி மன்னர்களை யெல்லாம் ஆட்கொண்டிருந்த மண்ணாசை, ஜகன் மாதாவாகிய மாரி யம்மனைக்கூட ஆட்கொண்டிருந்ததோஎன்னமோ, யார்கண்டார்கள்

‘நடமாடாத தெய்வ'த்துக்குச் சொந்தமாயிருந்த அந்த மைதானத்தில் எத்தனை 'நடமாடும் தெய்வ'ங்கள் குடியிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் ஆள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு, மூன்று என்று மாதந்தோறும் வாடகை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த வாடகை நிலத்துக்கு மட்டுந்தான்; குடிசைகளெல்லாம் அவரவர்கள் சொந்தச் செலவில் போட்டுக் கொண்டவை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அற்பர்களின் பிச்சைக்காசைக் கொண்டுதான் ஆனானப்பட்ட அந்த மாரியம்மன் தேர் என்றும், திருவிழா என்றும் தன்னைப் பற்றித் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டியிருந்தது!

அந்த மைதானத்தில் குடியிருந்தவர்களில் செங்கண்ணனும் ஒருவன். அவனும் அவன் மனைவி கண்ணாத்தாளும் கொத்தனார்களுக்கு உதவியாகச் சிற்றாள் வேலை செய்பவர்கள். தினசரி பொழுது விடிந்ததும், அவர்கள் இருவரும் தங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் குறிப்பிட்ட ஒர் இடத்தை நோக்கிக் கிளம்பிவிடுவார்கள். அங்கே தான் அவர்களைப் போன்ற தொழிலாளிகள் பலர் தினந்தோறும் வந்து வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பது வழக்கம். கட்டிட வேலைக்கு ஆட்களைத் தேடிக்கொண்டு வருபவர்களும் அங்கே வந்துதான் தங்களுக்குத் தேவையான ஆட்களைப் பொறுக்கி அழைத்துக் கொண்டு போவார்கள்.

இம்மாதிரி இடங்கள் அநேகமாக எல்லா ஊர்களிலும் கடைத் தெருவைச்சார்ந்துதான் இருக்கும். இப்படியிருப்பதில் ஒரு விசேஷப்