பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடவுள் என் எதிரி

39

"உதவி கோரியதற்கு உங்கள் அப்பா ஒரே வாத்தையில் ‘இல்லை' என்று சொல்லியிருக்கலாம். ஆனால் என் அண்ணாவின் கஷ்ட காலம் அவர் அப்படிச் சொல்லவில்லை. முதலில் உமது பஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும்; அப்புறம் வங்கப் பஞ்சத்தைத் தீர்க்கப் பாரும்!" என்று என் அண்ணாவின் ஏழ்மை நிலையைப் பற்றி என்னவெல்லாமோ குறை கூறினாராம். அந்த ஆத்திரத்தில் அதி தீவிரவாதியான என் அண்ணா, தன் சகாக்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்றிரவே உங்கள் வீட்டுக் கஜானாவில் கையை வைத்துவிட்டார். களவாடிய பணத்தை மேற்படி நிதிக்கும் அனுப்பி வைத்துவிட்டார். இப்பொழுது உங்கள் அப்பா கொடுத்த தகவலின் பேரில் போலீசார் என் அண்ணாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிமிஷத்திலும் அவர்கள் அண்ணாவைக் கைது செய்யலாம். எனக்கோ அவரைப் பிரிந்தால் வேறு நாதி கிடையாது. இதற்கு நீங்கள் நான் ஏதாவது உதவி செய்ய வேணும்.”

ஒரு நிமிஷம் நான் யோசித்துப் பார்த்தேன். அவளுடைய அண்ணா வங்க நிதிக்கு உதவி கோரிய அன்று நானும் அதற்காக என் அப்பாவிடம் உதவி கோரி, வேண்டிய வசவு வாங்கியிருந்தேன். இந்தச் சம்பவம் என் கவனத்துக்கு வந்ததும், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு நான் அவளுக்கு உதவி செய்வதென்று தீர்மானித்தேன். ஆகவே நான் அவளைப் பார்த்து, “இப்படியே உன் அண்ணாவைத் தலைமறைவாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கச் சொல்லு; நான் எப்படியாவது அவரை அந்த ஆபத்திலிருந்து தப்புவிக்கிறேன்" என்றேன்.

"உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு" என்று அவள் எனக்குத் தலை வணங்கிவிட்டுத் திரும்பினாள்.

"உன் பெயர்?" என்றேன்.

"கோதை" என்றாள்.

கோதை.....கண்டதும் என் உள்ளத்தில் கோயில் கொண்டு விட்டாள். நானும் அந்த நிமிஷமே கற்பனை உலகில் அவளுடன் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டேன்.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே 'ஓடு ஒடு' என்று ஒடுகிறாள். "கோதை, கோதை" என்று கூவிக்கொண்டே நானும் அவளுக்குப் பின்னால் ஒடுகிறேன்.