பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவலை இல்லை

ந்த ஊரில் அரியநாயகத்தின் செருப்புக் கடைதான் பேர்போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு வளர்த்து வந்தான். காத்தானிடமிருந்து முக்கால் ரூபாய்க்கு வாங்கிய செருப்பை மூன்றரை ரூபாய்க்கு விற்றுச் சம்பாதித்த லாபத்தைக் கொண்டுதான் அரியநாயகம் தன்னுடைய டாம்பீகமான வாழ்க்கையை நடத்தி வந்தான்.

காத்தானுக்கு ஒரே ஒரு பெண். அவளை அவன் கானாற்றில் கட்டிக் கொடுத்திருக்கிறான். அவள் ஒரு சமயம் பிரசவத்திற்காகப் பிறந்தகத்துக்கு வந்திருந்தாள். அப்பொழுது மழைக்காலம். செருப்பு வியாபாரம் க்ஷீண தசையை அடைந்திருந்தது. ஆகவே காத்தான் தன்னுடைய மகள் வந்திருந்த சமயம் மிகவும் கஷ்டமான நிலைமையில் காலங் கழித்துக் கொண்டிருந்தான்.

பெண் பிரசவ வேதனைப் படும்போது காத்தானின் கையில் ஒரு காசும் இல்லை. கடன் கேட்டுப் பார்த்தான்; கிடைக்கவில்லை.

அவன் மனம் சோர்ந்தது. மதி மயங்கியது. மனைவி முகத்தைப் பார்த்தான். “செல்லாத்தா....!” என்றான். மேலே அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவளும் அவன் முகத்தைப் பார்த்தாள். “என்னா!” என்றாள். அவளாலும் அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தன் பெண்ணின் வேதனைக் குரலைக் கேட்டதும் காத்தானின் மனம் பதைபதைத்தது. திண்ணையைவிட்டு எழுந்தான். ‘விர்’ரென்று நடந்தான். எங்கே போகிறான்? போகும்போது கூப்பிடலாமா? சகுனத் தடையல்லவா? செல்லாத்தா சிறிது நேரம் யோசனை செய்து பார்த்தாள். அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது. வேறு எங்கே போகப் போகிறார்? எஜமான் கடைக்குத்தான் போவார்!

பகவானே! அவர் மனம் இரங்குவாரா?

* * *

காத்தான் கடைக்கு வந்தான். கடையின் வாயிலைப் பார்த்தான். மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமில்லை. தன்னுடைய எஜமானனுடையதுதான். எஜமான் உள்ளே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டான். அவன் முகம் மலர்ந்தது. எஜமானை நோக்கினான். அவன், தான் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டின்