பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவலை இல்லை

61

நினைத்துப் பார்! பத்துப் பதினைந்து ரூபாய்க்கு வெய்யிலில் அலைந்து மதப் பிரசாரம் செய்து வந்த நீ இன்று நிழலில் உட்கார்ந்து நகத்தில் மண் படாமல் மாதம் நூற்றுக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு யார் காரணம்? விழிக்காதே; காத்தான் தான்! - யோசித்துப் பார்! அப்படிப் பட்டவனுக்கு ஆபத்துச் சமயத்தில் நெஞ்சில் ஈரமில்லாமல் ஒரு பத்து ரூபாய் - அதுவும் கடனாக இல்லை என்றாயே!”

அரியநாயகத்திற்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

அவன் செய்துவிட்ட தவறு அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது - காலையில் எழுந்ததும் காத்தான் வீட்டுக்கு ஓட வேண்டும்; தான் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக இருபது ரூபாயாவது அவனிடம் கொடுத்துவிட்டு வரவேண்டும்; தன்னுடைய நடத்தைக்காகத் தன்னை மன்னித்துவிடும்படி காத்தானைக் கேட்க வேண்டும் - இப்படியெல்லாம் எண்ணிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அரியநாயகம்.

* * *

றுநாள் பொழுது விடிந்தது. அரியநாயகம் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு காத்தான் வீட்டுக்குப் போனான். அவனுடைய குடிசைக்குள் பயங்கரமான நிசப்தம் குடி கொண்டிருந்தது.

“காத்தான், காத்தான்!” என்று உரக்கக் கூப்பிட்டான் அரியநாயகம்.

காத்தான் நடைப் பிணம் மாதிரி வெளியே வந்தான். அவன் உடம்பில் உணர்ச்சியில்லை; கண்களில் ஒளியில்லை; கால்களில் பலம் இல்லை.

“காத்தான்! இதோ பார்; கவலைப்படாதே! இந்தா, ரூபாய் இருபது!” என்று சொல்லி அரியநாயகம் தன் பணப் பையை எடுத்தான். அதிலிருந்த ஒரு ரூபாய் நோட்டுப் புத்தகத்தை எடுத்து இருபது ரூபாயைப் பிய்த்துக் காத்தான் கையில் கொடுத்தான்.

காத்தான் அந்த நோட்டுக் கத்தையை வாங்கிக் காற்றிலே பறக்க விட்டு விட்டு “உங்க பணம் ஒண்ணும் இல்லாமலே என் கவலையெல்லாம் தீர்ந்து போச்சுங்க; குழந்தை போனத்துக்கப்புறம் எனக்குப் பணம் எதுக்கு?” என்றான்.

அவனுடைய உதடுகள் துடித்தன. கண்ணீர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்தது. அதைப் பார்த்த அரியநாயகத்தின் கண்களிலும் நீர் துளித்தது. அவன் வாய் அடைத்து நின்றான்.