பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்க வளையல்

67

மண்டிக்குப் போய்விட்டு அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அஜ்ஜாவைக் காணவில்லை. அவளுக்குப்பதிலாக கட்டிலின்மீது ஒரு கடிதம் கிடந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தேன்.

“எனது அன்பருக்கு

என் மனத்தை எவ்வளவோ சிரமத்துடன் திடப்படுத்திக் கொண்டு உமக்கு நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். வெகு சீக்கிரத்தில் மறைந்துவிடப் போகும் எனது அழகு உமது அறிவைப் பாழாக்கிவிட்டது. அதற்காக என்னை மன்னிக்கவும். நீர் முதலில் தெரிவித்தமாதிரி உம்மை நான் சகோதரனாகவே பாவித்திருந்தால்?..... வளையல்கள் பீரோவில் இருக்கின்றன. என்னைத் தேட வேண்டாம் தேடுவதில் பயனில்லை.

“அஜ்ஜா!”

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அந்தத் தங்க வளையல்களை விற்றுப் பணத்தைக் கொண்டுபோய் அப்துல் காதரிடம் சேர்த்தேன். அவனிடம் நடந்த கதையைச் சொல்லி, “என்னை மன்னிக்கவேணும்” என்று கேட்டுக் கொண்டேன்.

அவன் எனது வேண்டுகோளை லட்சியம் செய்யால், “அஜ்ஜா!” என்றான் சிரித்துக் கொண்டே.

என்ன ஆச்சரியம்! அடுத்த நிமிடம் அஜ்ஜா எனக்கு எதிரே வந்து நின்று புன்னகை புரிந்தாள். அப்துல் காதர் “நீ நினைத்தபடி நடந்துவிட்டது. ஆனாலும் என்னிடம் வேலை செய்யவோ, எனது முகத்தில் மீண்டும் விழிக்கவோ உன் கணவனுக்கு மனமிராது. ஆகவே இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்னைக்குப் போய் ஏதாவது வியாபாரத்துறையில் ஈடுபட்டு மனம்போல் உங்களது வாழ்நாட்களைக் கழியுங்கள்” என்று அவளிடம் சொல்லி நான் கொண்டு வந்து கொடுத்த பணத்தை திருப்பி என்னிடமே கொடுத்துவிட்டான்.

மறுநாள் அவளை வாயார வாழ்த்திக் கொண்டே நாங்கள் சென்னைக்குப் பயணமானோம் - அப்புறம் என்ன? முக அழகோடு அக அழகும் பெற்றிருந்த அஜ்ஜாவின் அரவணைப்பிலே நான் எல்லாவற்றையும் மறந்தேன்!