பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

விந்தன் கதைகள்

ருக்கு அப்பாலிருந்த ஓர் ஒண்டிக் குடிசைக்குள் முத்தம்மாவைக் கொண்டு போய்த் தள்ளினான் சாத்தப்பன். அப்பொழுது, தன் படுமோசமான பலாத்காரச் செய்கையில் அவன் வெற்றியைக் கண்டுவிட்டவன்போல் விளங்கினான். வலிமை மிகுந்த அவன் வலக்கரம் மீசையைக் ‘கறுக் ‘காக முறுக்கிவிடுவதில் ஈடுபட்டது.

கண்ணீர் தேங்கிய முத்தம்மாவின் கண்களும், இரத்தக் கறை படிந்த சாத்தப்பனின் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்தன. அடுத்த நிமிடம் “நாளைக் காலை நாலு மணிக்கெல்லாம் அடுத்த ஊர் ஸ்டேஷனிலிருந்து அரக்கோணத்துக்கு வண்டி போகுது. அந்த வண்டியில் நாம் இருவரும் போக வேண்டும்; தயாராயிரு!” என்று அதிகாரக் கட்டளை - உடனே கதவை அடைக்கும் சத்தம்; ‘கலகல’வென்று சிரிக்கும் சத்தம்.

பெண்ணுடன் பிறக்காத பேய் அற்ப வெற்றியின் அளவில்லாத ஆனந்தம் கொண்டு இரைந்து சிரித்தது.

இருட்டறையில் தனியே விடப்பட்ட முத்தம்மாவின் உள்ளத்தில் எதற்கென்று தெரியாத ஒர் அமைதி. அந்த அமைதியில் பாரத நாட்டுப் பெண்மணிகளுக்கென்றே பிரத்தியேகமாக அமைந்த கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என்ற கவலை. உடனே அவள் மனக்கண் முன் ஒரு பெண் உருவம் காட்சி அளித்தது.

“தாயே! தாங்கள் யாரோ?”

“நான்தான் பத்தினித் தெய்வம். குழந்தாய் உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்”

“அப்படியா? அந்தப் பாவியின் பலாத்காரத்துக்கு முன்னால் என் கற்பு காப்பாற்றப்படுமா? எப்படிக் காப்பாற்றுவாய், தாயே?”

“உன்னைப் பலி கொண்டு!”

“என்னைப் பலி கொண்டா?”

“ஆம், என்றைக்காவது ஒரு நாள் நீ அழிவது நிச்சயம். ஆனால் உன்னைச் சேரும் பழி மட்டும் என்றென்றைக்கும் அழியாது. ஆகவே நீ பழிக்குப் பயப்படுகிறாயா, பலிக்குப் பயப்படுகிறாயா?”

“பழிக்குத்தான், தாயே!”

“அப்படியானால் எனக்குப் பலியாகிவிடு!”

“தங்கள் சித்தம்”

* * *