பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

விந்தன் கதைகள்

"அப்படியானால் உங்களுக்கு வாழ்வதில் ஆசை இல்லையா?"

"ஏது சாமி, வாழ்ந்தாத்தானே எங்களுக்கு அதிலே ஆசை இருக்கப்போவுது?"

"உங்களை யார் வாழவேண்டாம் என்கிறார்கள்? உழைத்தால் நீங்களும் உயரலாமே!"

அவன் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டேன் நான்.

"ஒழைச்சா ஒயராலாம்னு சொன்னீங்களே, அதுக்காகத் தான் சிரிச்சோம், சாமி!"

"ஏன், அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?"

"அது எப்படி இருக்கும் சாமி?சாமி, அவனவன் தலையெழுத்து எப்படியோ அப்படித்தானே எல்லாம் நடக்கும்?"

"சரி, உங்களுடைய தலையெழுத்து எப்படியிருக்கிறது?"

"நாங்க ஒழைச்சா நைனா முகம்மது ஒயரணும்னு இருக்குது சாமி!"

"அவன்யார், அவன்? இரண்டு வாரத்துக்கு முன்னால் இருளப்பன் தெருவிலே, ஏதோ ஒருவீட்டை எட்டாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தானே, அவனா?"

"ஆமாம் சாமி, நேத்துக்கூட இங்கே குதிரைவண்டியிலே வந்து இறங்கல, அவன்தான் சாமி!"

"அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"

"அதை ஏன் கேட்கறீங்க, சாமி! இப்போ விக்கிற விலைக்கு இந்தவலையிலே இருக்கிற மீன் அஞ்சுரூவாய்க்கு பஞ்சமில்லாம போவும். ஆனா என்ன பிரயோசனம்? மூணு ரூவாதானே கொடுக்கப் போறான் அந்தப் புண்ணியாத்மா"

"ஒரு கூடைமீன் ஐந்து ரூபாய்க்கு வாங்குபவனைவிட்டு விட்டு, நீங்கள் ஏன் மூன்று ரூபாய்க்கு வாங்கும் அவனுக்கு விற்கவேண்டும்? யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்கக் கூடாதா?"

"அது எப்படி முடியும், சாமி? போனமாசம் பொத்த லாப்போன குடிசையை பிரிச்சிக் கட்டிக்கிறதுக்காக ஆளுக்கு ஐம்பது ரூவா அவங்கிட்ட கடனா வாங்கிகிட்டோம். அதிலேயிருந்து நாங்க