பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலையெழுத்து

423

பிடிக்கிற மீனெல்லாம் கூடை மூணு ரூபா வீதம் அவனுக்கே கொடுக்கிறதுன்னும், கடனுக்காவத்தினம் ஒருரூவா கழிச்சிக்கிறதாப் பேச்சுங்க!"

"குடிசை போடும் போதே அதைப்பின்னால் பிரித்துக் கட்டவேண்டியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா? அதற்காக ஏன் முதலிலிருந்தே கொஞ்சங்கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது? அப்படிச் செய்திருந்தால் நைனா முகம்மதுவிடம் நூறு ரூபாய் கடனும் வாங்கியிருக்க வேண்டாம். தினசரி இரண்டு ரூபாய் நஷ்டத்துக்கு மீனையும் விற்றிருக்க வேண்டாமல்லவா?"

"நெசத்தான் சாமி, பொறக்காம இருந்தா சாகாம இருக்கலாம், சாமி!"

"அதைத்தான் நானும் சொல்கிறேன். கடன் வாங்காமல் இருந்தால் கொடுக்காமல் இருக்கலாமல்லவா?"

"முடிஞ்சாத்தானே, சாமி? இன்னிக்குத்தான் பாருங்களேன், அவன் வந்து இந்தமீனை எடுத்துகிட்டுக் கடனுக்கு ஒருரூவா போக, பாக்கி ரெண்டு ரூவா தரப்போறான். ஆளுக்கு ஒண்ணா அதைத்தான் வீட்டுக்குக் கொண்டு போவோம்னா முடியாதுங்களே? காலையிலேயிருந்து கஷ்டப் பட்ட ஒடம்புக்குள்ளே கள்ளுத்தண்ணி போனாத்தான் சரிப்பட்டு வரேங்குது!"

"கஷ்டப்பட்டால் கள் குடிக்க வேண்டுமா, என்ன? உங்களைப்போல் கஷ்டப்படும் குதிரையும், மாடும் கள் குடிக்காதபோது நீங்கள் மட்டும் ஏன் குடிக்க வேண்டும்?"

"அதுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அது தானே சாமி? அதைக் கூடவா, சாமி ஒழிச்சிப்பிடணும்?

"அப்போது தான் உங்கள் கஷ்டம் ஒழியும்"

"கள் ஒழிச்சா கஷ்டம் ஒழிஞ்சுடுமா, சாமி? கஷ்டம் ஒழிஞ்சாத்தான் கள் ஒழியும்!"

"அப்படியானால் உங்களுடைய பெண்டாட்டி பிள்ளைகளெல்லாம் ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?"

"அதுங்களே எங்கேயாச்சும் கூலிவேலை கீலிவேலை செஞ்சி வயித்தைக் கழுவிக்கும், சாமி"