பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

விந்தன் கதைகள்

"வாங்கறது வயித்துக்கு; காட்டிக் கொடுக்கறது பொழைப்புக்கு"

"நல்ல பொழைப்பு பொழைச்சீங்க, போங்கய்யா!" என்று சொல்லிக்கொண்டே, அதுவரை உட்கார்ந்திருந்த அந்தச் சுமைதாங்கியை விட்டு எழுந்து நடந்தான் முத்து.

"எங்கே வாத்தியாரே, கௌம்பிட்டே?" என்று கேட்டுக் கொண்டே, அவனைத் தொடர்ந்தான் அபேஸ் அய்யாக்கண்ணு.

"சொல்லச் சொல்லப் பேச்சுக்குப் பேச்சு என்னை 'வாத்தியாரே, வாத்தியாரே!'ன்னா கூப்பிட்டுகிட்டிருக்கே? உதைக்கிறேன் பாரு, உன்னை! என்று திரும்பினான் முத்து.

"இந்தக் கழுதை புத்தி உனக்கு எப்போ வந்துச்சி, வாத்தியாரே?" என்றான் அவன் மீண்டும்.

"இப்போத்தான்!" என்று முத்து உதைக்க, அந்த உதையிலிருந்து அவன் லாகவமாகத் தப்பி ஓட, இருவரும் பிரிந்தார்கள்.

து என்ன வேடிக்கை! - வழியில் தன்னைக் கண்டவர்க ளெல்லாம் ஒதுங்கி நடக்கிறார்களே? பெண்களில் சிலர் தன்னைப் பீதியுடன் பார்க்கிறார்களே? குழந்தைகள் கை கொட்டிச் சிரிக்கின்றனவே? அவற்றில் சில தன்னைக் கல்லால்கூட அடிக்கின்றனவே?

ஒரு வேளை .......

அருகிலிருந்த முடி திருத்தகத்துக்குள் அவசர அவசரமாக நுழைந்து, தன் அழகைக் கண்ணாடியில் பார்த்தான் முத்து - சந்தேகமென்ன, அசல் பைத்தியம்தான்!

இந்தக் கோலத்தில் எங்கேயாவது போனால் தனக்கு வேலையா கொடுப்பார்கள்? பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் 'போன்'தான் செய்வார்கள்!

முதலில் இந்தத் தாடி - மீசையை வழித்துக் கொள்ள வேண்டும்; அதற்குப் பிறகு இந்தக் கிழிந்த வேட்டி-சட்டைக்குப் பதிலாக வேறொரு வேட்டி-சட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் - அதற்குப் பிறகுதான் வேலை, கல்யாணம் எல்லாம்!