பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

429

இவற்றுக்கெல்லாம் காசு? - எதைத் தேட வேண்டுமானாலும் முதலில் அதையல்லவா தேட வேண்டியிருக்கிறது?

'கல்யாணமானால் பைத்தியம் தெளியும்; பைத்தியம் தெளிந்தால் கல்யாணமாகும்' என்ற கதையாகவல்லவா இருக்கிறது என் கதை?

முடி திருத்தகத்தை விட்டுக் கீழே இறங்கினான் முத்து. அவனுக்கு எதிர்த்தாற்போல் ‘ஒத்துழையாமை இயக்க'த்தில் ஈடுபட்டிருந்த கார் ஒன்று அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது - காரணம் தன்னைத் தள்ள முயன்ற முதலாளியை அது கீழே தள்ளிவிட்டு, 'என்னையாதள்ளுகிறாய்?' என்பது போல் ஓர் உறுமல் உறுமி நின்றதுதான்!

வெட்கத்துக்கு அஞ்சி விழுந்த வேகத்தில் எழுந்து நின்ற முதலாளியை நெருங்கி, "நான் தள்ளட்டுமா, ஸார்?" என்றான் முத்து.

"தள்ளப்பா, தள்ளு!" என்றார் முதலாளி, சட்டையில் ஒட்டிக்கொண்ட மண்ணைத் தட்டி விட்டுக்கொண்டே.

"நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய் விட மாட்டீர்களே" என்றான் முத்து, தலையைச் சொறிந்து கொண்டே.

"ஏன், அது மட்டும் போதாதா உனக்கு?" என்றார் முதலாளி குறுநகையுடன்.

"போதாது ஸார்! அந்த ‘நன்றி'க்குப் பெட்டிக் கடைக்காரன்கூட 'ஒரு பீடி' கொடுக்க மாட்டேன் என்கிறான், ஸார்!" என்றான் முத்துவும் அதே குறு நகையுடன்.

"சரி, தள்ளு! நன்றியோடு நாலணாவும் சேர்த்துத் தருகிறேன்"

"ரொம்ப சந்தோஷம், ஸார்! நீங்கள் ஏறுங்கள், வண்டியில்!" என்று வரிந்து கட்டிக்கொண்டு அவருடைய காரைத் தள்ளினான் முத்து.

கார் கிளம்பிற்று -ஆனால் முதலாளி?-நிற்க வில்லை; போயே போய்விட்டார்!

அட கடவுளே! இல்லாதவன்தான் ஊரை ஏமாற்றுகிறான் என்றால் இருப்பவனுமா ஊரை ஏமாற்றவேண்டும்? - இருக்கட்டும், இருக்கட்டும்; அந்த ஒரு வகையிலாவது அவர்களுக்குள் ஒற்றுமை