பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

431

"கையை நீட்டிக் காசு வாங்கினா, நீ செய்த புண்ணியத்துக்குப் பலன் இல்லாமற் போய்விடுமேடா! போற வழிக்குப் புண்ணியம் வேண்டாமோ, உனக்கு?"

"வேண்டாம் பாட்டி, இருக்கிற வழிக்கு ஏதாச்சும் கெடைச்சாப் போதும்"

மூக்கால் அழுது கொண்டே பாட்டி கொடுத்த இரண்டணாவை வாங்கிக்கொண்டு, அடுத்தாற் போலிருந்த தேநீர் விடுதிக்குள் நுழைந்தான் முத்து. ஓரணாவுக்குப் பன்; ஓரணாவுக்கு டீ - தீர்ந்தது அவனுடைய பசிப் பிரச்னை, அப்போதைக்கு!

தேவலையே, இந்தக் கூலிப் பிழைப்பு!-இந்தப் பிழைப்பைக் கொண்டே தாடி மீசைப் பிரச்னையையும் வேட்டி-சட்டைப் பிரச்னையையும்கூடத் தீர்த்துக்கொண்டு விடலாம் போலிருக்கிறதே?

அவ்வளவுதான்; 'கூலி வேணுமா ஸார், கூலி? கூலி வேணுமா ஸார், கூலி?' என்று எங்கெல்லாம் கூலி கிடைக்குமோ, அங்கெல்லாம் கூவிக் கூவிக் அலைய ஆரம்பித்துவிட்டான் அவன்!


த்துப் பதினைந்து நாட்கள் படாத பாடு பட்ட பிறகு அவனால் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி முழுசாக ரூபா ஐந்துதான் சேர்க்க முடிந்தது. உடனே ஒரு 'மரத்தடி ஸலூ'னைத் தேடிப் பிடித்து நாலணாவுக்கு முடி வெட்டிக்கொண்டான்; பாக்கியிருந்த ரூபா நாலே முக்காலுக்குத் தகுந்தாற் போல் வேட்டி-சட்டையும் வாங்கிக் கொண்டான்-இனி வேலை தேட வேண்டியதுதான் பாக்கி!

அதற்காக யார் யாரையோ 'காக்கா' பிடித்துப் பார்த்தான். அவர்கள் 'கவனிக்கிறேன், கவனிக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு வந்ததைப் பார்த்தால், அவன் கண்ணை மூடும் வரை அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் போல் தோன்றிற்று. எனவே அவர்களை விட்டுவிட்டு அவன் 'வேலை தேடித் தரும் ஸ்தாபன’த்தின் உதவியை நாடினான். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரச்சொல்லி அவர்கள் அவனுடைய காலை ஒடித்தார்களே தவிர, வேலை தேடித் தரவில்லை!

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தெருவில் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோதுதான் ஓர் 'ஐஸ் - கிரீம் வாலா'வின் சிநேகம் அவனுக்குக் கிடைத்தது.