பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

விந்தன் கதைகள்

தங்களுக்கிருந்த குறைகளை அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்ட பிறகு, அந்த ஐஸ்-கிரீம் வாலா கேட்டான்:

"உன்னால் பத்து ரூபா முன் பணமாகக் கட்ட முடியுமா?"

"கட்டினால் என்ன கிடைக்கும், வேலை கிடைத்துவிடுமா?" என்று ஆவலுடன் கேட்டான் முத்து.

"கிடைக்கலாம்" என்றான் அவன்.

"அப்போதும் சந்தேகம்தானா, என்ன வேலை அது?"

"என்னைப்போல் ஐஸ்-கிரீம் வண்டி தள்ளும் வேலைதான்"

"சம்பளம்?"

"சம்பளம் என்று ஒன்றுமில்லை; கமிஷன்!"

"கமிஷனா, அதில் என்ன கிடைக்கிறது, உனக்கு?"

"தினம் இரண்டு ரூபாய்க்குப் பஞ்சமில்லை!"

முத்து யோசித்தான்; "என்னயோசிக்கிறாய்?" என்று கேட்டான் அவன்.

"ஒன்றுமில்லை; இந்த வேலை செய்தால் அவள் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாளா என்று தான் யோசிக்கிறேன்!" என்றான் முத்து.

"அவள் வேறு இருக்கிறாளா, உனக்கு?"

"இருக்கிறாள், இருக்கிறாள்"

"அதனால் என்ன? 'எங்கே வேலை?' என்று கேட்டால், 'ஹிமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனியிலே' என்று சொல்; 'என்ன வேலை?' என்று கேட்டால், 'சேல்ஸ்மேன் வேலை' என்று சொல்!"

"சேல்ஸ்மேன்! - எதையும் இங்கிலீஷிலே சொன்னால் கொஞ்சம் மதிப்பாய்த் தான் இருக்கும் போலிருக்கிறது!"

"அதுதான் அங்கே பாய்ண்ட்!" என்று அதிலிருந்து 'பாய்ண்ட்'டை எடுத்துக் காட்டிவிட்டு, "ஆனால் ஒன்று!" என்று இழுத்தான் அவன்.

"என்ன?" என்று கேட்டான் முத்து.

"அந்த வேலைக்கும் ஏகப்போட்டி, அங்கே! இந்த மாதக் கடைசியில் நான் அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகிறேன் என்கிற விஷயம் எப்படியோ வெளியே