பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

435

மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே எழுந்து, எழும்பூர் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் முத்து. 'ஓசிப் பீடித் தோழ’ரின் யோசனை வீண் போகவில்லை; அன்று மத்தியானத்துக்குள் ஒரு ரூபா கிடைத்து விட்டது அவனுக்கு!

இன்னும் எட்டே அணாக்கள்.......

வெளியூர் பஸ் நிலையத்துக்குப் போனால் எளிதில் கிடைத்துவிடுமே அது? - அவ்வளவுதான்; எடுத்தான் ஓட்டம், பஸ் நிலையத்திற்கு!

அங்கே பெட்டியும் படுக்கையுமாக ஓர் உல்லாசப் பேர்வழி நின்று, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி, “கூலி வேணுமா ஸார், கூலி?” என்றான் முத்து, வழக்கம்போல்.

"எடுத்துக் கொள்!" என்று கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டி படுக்கையைச் சுட்டிக் காட்டி விட்டு அவர் நடந்தார்.

"ரொம்ப தூரம் போகணுமா, ஸார்?"

இதை அவன் கேட்டிருக்க மாட்டான்; ஆறு மணிக்குள் 'இமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனிக்'குப் போகவேண்டும் என்ற கவலை அவ்வாறு கேட்க வைத்துவிட்டது, அவனை!-அதை அறிவாரா அந்த உல்லாசப் பேர்வழி? - "ரொம்ப தூரம் போக வேண்டுமென்றால் உன்னை ஏண்டா கூப்பிட்டிருக்கப் போகிறேன்? நீ ஏதாவது ஒரு 'டாக்ஸி ஸ்டாண்'டருகே என்னை விட்டுவிடு, போதும்!" என்றார் சுடச்சுட.

"அங்கே 'டாக்சி ஸ்டாண்டு' என்கிற போர்டு மட்டும்தான் இருக்கும் ஸார், டாக்சி இருக்காது!" என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

"ரோடில் எவனாவது காலியாக வரமாட்டானா? - வா, பார்ப்போம்!" என்றார் அவர்.

இருவரும் வெளியூர் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள் - முத்து சொன்னபடி, 'டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸி இல்லை!

"யு ஆர் கரெக்ட்!" என்று ரோடைப் பார்த்தார் அவர்; எத்தனையோ டாக்ஸிகள் வருவதும் போவதுமாய்த்தான் இருந்தன; ஆனால் ஒன்றாவது அவருடைய கை தட்டலைக் கேட்டு நிற்க வேண்டுமே?-ஊஹும்!