பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்தி

443

அப்பா! அதோ இருக்கிறது பாருங்கள் மாடிப்படி, அந்த மாடிப் படிக்குக் கீழே இருக்கும் சந்தில் நான் ஒளிந்து கொண்டு விட்டால், அண்ணா மான்ஸுனால் என்னைப் பிடிக்கவே முடியாது, அப்பா!" என்றாள் உற்சாகத்துடன்.

"பார்த்தீங்களா, இந்த வீட்டைப்பற்றி உங்களுக்கு எத்தனையோ குறைகள்! உங்கள் குழந்தைக்கோ ஒரு குறையும் தோன்றவில்லை; தனக்குக்கிடைத்த ஒரு மாடிப் படிச்சந்தை வைத்துக் கொண்டு, 'வீடே எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்துப்போய்விட்டது!' என்கிறாள் திருப்தியுடன்" என்றேன் நான்.

அவ்வளவுதான்; "எக்ஸெலெண்ட் ஐடியா, ப்ரில்லியண்ட் ஐடியா!" என்று ஒரேகத்தாகக் கத்திக்கொண்டே துள்ளுத்துள்ளென்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார் கவிஞர் நட்.

"என்ன! என்ன வந்துவிட்டது, உங்களுக்கு?" என்றேன் நான், ஒன்றும் புரியாமல்.

"சந்தேகமேயில்லை, இந்த ஆண்டு நோபல் பரிசு எனக்குத்தான்!" என்றார் கவிஞர், மீண்டும் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தபடி.

"வாங்கும் போது வாங்கிக் கொள்ளுங்களேன்; அதற்காக இப்போதே 'குதி, குதி' என்று குதிப்பானேன்?" என்றேன் நான்.

"உங்களுக்குத் தெரியாது, ஸார்! இப்படி ஓர் 'ஐடியா' இதுவரை 'ஸ்ட்ரைக்' ஆகாமல்தான் எப்போதோ வாங்கியிருக்க வேண்டிய நோபல் பரிசை நான் இன்னும் வாங்காமலிருக்கிறேன். கடைசியில் என் கண்மணியாலல்லவா அந்த 'ஐடியா' எனக்கு ‘ஸ்ட்ரைக்'காகியிருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே குழந்தையைத் தூக்கி முத்து, முத்து' என்று முத்த ஆரம்பித்துவிட்டார் அவர்.

"அப்படி என்ன ஐடியா ஸார், திடீரென்று உங்களுக்கு 'ஸ்ட்ரைக் 'காகிவிட்டது?" என்று கேட்டேன் நான்.

"மனிதன் பேராசை பிடித்தவன்; அவனுக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்பதே ஏற்படுவதில்லை. மேலும் மேலும், 'இது கிடைக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே!' என்று கிட்டாத பொருள்களுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கிறான்; ஆனால் குழந்தைகள்-கல், மண், கதவிடுக்கு, மாடிப்படி