பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் ஒன்பாற் சுவையார்

459

'மாக்க'ளன்றோ உள்ளனர்? அது குறித்தன்றோ அஞ்சல்காரர் 'அஞ்சல் உடை' அணிவது போன்று, காவலர் 'காவல் உடை' அணிவது போன்று, யாமும் கவிஞன் என்பதற்காகக் 'கவிஞர் உடை'யை எமது கற்பனையால் கண்டு அணியவேண்டி உள்ளது? 'ஒன்பாற் சுவையார்' என வெறுமனே சொல்லிக் கொள்ளாமல், 'கவிஞர் ஒன்பாற் சுவையார்' என எமக்கு யாமே 'கவிஞர்' என்னும் கௌரவப் பட்டத்தையும் அணிந்து கொள்ள வேண்டி உள்ளது?"

"ஐயகோ, ஐயகோ! இஃது அனுதாபத்துக் குரியதே, இஃது மிக மிக அனுதாபத்துக்குரியதே!"

"இதுபோதாவது புரிந்ததா, பாலர் பாடத்தில் அணிலின் படத்துக்குக் கீழே 'அணில்' என எழுத்தால் விளக்குவது போன்று, ஆட்டின் படத்துக்குக் கீழே 'ஆடு' என எழுத்தால் விளக்குவது போன்று, யாமும் கவிஞருக்குரிய ஆடையணிகள் தரிப்பதோடு, 'கவிஞர்' என்ற பட்டத்தையும் எமக்கு யாமே எமது பெயருக்கு முன்னால் ஏன் சூட்டிக் கொண்டிருக்கிறோம் என்று?"

"புரிந்தது சுவாமி, புரிந்தது!"

அவ்வளவுதான்; அதற்குமேல் நான் அங்கே நிற்கவில்லை -ஆளை விட்டால் போதாதா? - எடுத்தேன் ஓட்டம்!

த்தகு கவிஞர்பிரானின் இயற்பெயர் ஒப்பிலாமணி என்பதாகும்; அன்னாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையாராவர்.

கவிஞர் ஒன்பாற்சுவையாருக்குக் கவிதை பிறந்ததோ இல்லையோ, 'கவிதா தேவி' என்ற பெண் மகவு பிறந்தது மட்டும் உண்மை; உண்மையிலும் உண்மை!

அந்தப் பிள்ளைக்கனி அமுதுக்கு ஆறு ஆண்டுகள் நிறைந்து, ஏழாவது ஆண்டு பிறந்து தவழ்ந்து கொண்டிருந்தது.

கவிஞர் பெருமான் ‘நமக்குத் தொழில் கவிதை' என்று தமக்குத் தாமே வரித்துக்கொண்டு விட்டதால், காசுக்கும் அவருக்கும் காணாத தூரமாயிருந்து வந்தது. எனவே, இட்டிலி-மசால் வடைக் கடையை நம்பி, அன்னாரின் இல்லாள் இல்லறத்தை இனிதே நடாத்தி வரலாயினள்.