பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

விந்தன் கதைகள்

சென்ற மாமாங்கத்தின்போது அவன் பிறந்தானாம் - போதாதா, ஜாதகம்?

ஒரு நாள் அவனை நான் கேட்டேன்- "உன்னைப் போன்றவர்களை எப்படியாவது படிக்க வைத்துவிடவேண்டும் என்பதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு மேல் பள்ளிக்கூடம், சம்பளச் சலுகை, ஒரு வேளை ஓசிச் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்து வருகிறார்களே நீ படிக்கக்கூடாதா?" என்று.

"நான் படிக்கத் தயார்தான் ஸார், ஏன்னா, என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சேர்த்துச் சாப்பாடு போட்டால்!" என்றான் அவன்.

"அவர்களுக்கு நீயாசாப்பாடு போடுகிறாய்?"

"நான் ஒரு வேளை அவர்களுக்குப் போட்டால், அவர்கள் ஒரு வேளை எனக்குப் போடுகிறார்கள்!"

அதற்கு மேல் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை - என்ன கேட்பது, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள்ள ஒரே பிரச்னை சோற்றுப் பிரச்னையாயிருக்கும்போது?

வெளிக்குப் போகும் வேலையைக்கூடப் படுக்கையறைக்குப் பக்கத்திலேயே 'நாகரிக'மாகச் செய்து கொண்டிருந்த பாங்கர் வேங்கடாசலபதி, அருணாசலத்துக்கு ஒரு பெரும் புதிராயிருந்து வந்தார். அவருடைய அறைக்கு நேர் எதிரே அவன் வேலை செய்யும் பட்டறையும் இருந்ததால், துருத்தியை மிதித்தபடி அவன் அவரையே பார்க்கப் பார்க்க அவருடைய பிறவியே 'அதிசயப் பிறவி'யாகத் தோன்றும் அவனுக்கு. குளிர்சாதன அறை குளுகுளுக்க, பட்டு மெத்தை பளபளக்க, மின் விசிறி சிலுசிலுக்க, அத்தர் மணம் கமகமக்க அவர் தூங்கும் அழகையும், பொழுது விடிவதற்கு முன்னால் அழகி ஒருத்தி அரிதுயில் களைந்து, எழில் மிகு வீணயை எடுத்து மீட்டி பூபாளம் வாசிப்பதையும், அவளுக்கு அடுத்தாற் போல் கையில் டூத் பேஸ்ட் - பிரஷ்ஷுடன் ஒருவன், துண்டுடன் ஒருவன், காபியுடன் ஒருவன் பறந்து வந்த வந்த அறையைச் சூழ்ந்து கொண்டு நிற்பதையும், அவர் எழுந்து வாயைத் திறப்பதற்கு முன்னால் அத்தனை பேரும் ஓடோடியும் வந்து, 'என்ன, என்ன?' என்று கண்ணால் கேட்பதையும், "ஒன்றுமில்லை, கொட்டாவி விடத்தான் வாயைத் திறந்தேன்!" என்று அவர் திருவாய் மலர்ந்தபின் அவர்கள் ஒதுங்கி நிற்பதையும்