பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரு பேரப்பிள்ளைகள்

473

இடறித் தொலைக்கிறது? அதற்காகப் பேரப் பிள்ளையைக் கூப்பிட்டேன், துணைக்கு. அவன் என்னடா என்றால், 'நீ போதாத்தா, எனக்கு வேலை இருக்கு!' என்று என் தலையில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான், பம்பரம் ஆட! அந்தப் பயலுக்கு ஒரு முறை ‘டிப்தீரியா' வந்திருந்தபோது, அவனுக்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம் இருக்கிறதே, அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!"

"உம்முடைய பேரப் பிள்ளையைப் பார்க்கும் போது என்னுடைய பேரப் பிள்ளைகள் எவ்வளவோ தேவலை போலிருக்கிறதே?"

"உங்களுக்கு ஏதய்யா, பேரப் பிள்ளைகள்?"

"ஏன் இல்லை, ஒருவருக்கு இருவர் இருக்கிறார்களே, சுவாமி"

"இதே ஊரிலா?"

"ஆமாம்"

ஆச்சரியமாக இருக்கிறதே?"

"அதைவிட ஆச்சரியம் என்ன வென்றால், அவர்கள் நான் கூப்பிடும்போது பம்பரம் ஆடப் போவதுமில்லை; பட்டம் விடப் போவதுமில்லை!"

"கொடுத்து வைத்தவர்தான்!"

"அவர்களுக்கு இதுவரை 'டிப்தீரியா'வும் வந்தது கிடையாது; 'டான்'ஸிலும் வந்தது கிடையாது!"

"வரவேண்டாம்; அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு எதுவுமே வர வேண்டாம்."

"அவர்கள் என்னை அவமதிப்பதுமில்லை; அலட்சியப் படுத்துவதுமில்லை!"

"தீர்க்காயுசாக இருக்கட்டும்!"

"நான் எங்கே கூப்பிட்டாலும் சரி, எப்பொழுது கூப்பிட்டாலும் சரி-அவர்கள் என்னுடன் வரத்தயார்!"

"கிலோ கணக்கில் சாக்லெட் வாங்கி, கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ?"