பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணமே! அன்புக்கும் அதுவே ஆதாரம்

"இது உன் அம்மா உனக்கு வாங்கிக் கொடுத்ததா, வாங்காமல் கொடுத்ததா?" என்று அதைக் குறும்புடன் கேட்டுவிட்டு, 'கலகல' வென்று நகைத்தது மச்சு வீட்டுக் குழந்தை.

இந்தச் சமயத்தில் கல் உடைத்த கையை ஆற்று நீரில் கழுவிக் கொண்டு, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறித் தோளின் மேல் போட்டுக்கொண்டு அந்த வழியாக வந்த குச்சு வீட்டுக் குழந்தையின் அப்பன், "என்ன, அம்மா! ஏன் அழறே?" என்று கேட்டான். அழுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தும் ஒரு காரணமும் இல்லாதது போல!

"போப்பா! நீ எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தேன்னு கேட்டால், அம்மா சொல்லமாட்டேங்குதே!"

"நானா, உனக்கா ! வந்து .... வந்து ......."

அவனாலும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை; விழித்தான்!

"ஏம்ப்பா , அது உனக்கும் தெரியாதா?" என்றது குழந்தை, ஏமாற்றத்துடன்.

"ஏம்மா தெரியாது? இதோ, என் அன்பு முத்தம்!- இதுதான் உனக்கு நான் வாங்கிக் கொடுத்தது, கொடுப்பது, கொடுக்கப் போவது எல்லாம்!" என்று கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே குழந்தையை வாரி எடுத்து முத்தப் போனான் அவன்.

"போப்பா! முத்தமாம் முத்தம்; யாருக்கு வேணும், உன் முத்தம்!" என்று அவனுடைய கையை உதறித் தள்ளிவிட்டு, விரைத்துக்கொண்டு நின்றது குழந்தை.

"அட, கடவுளே! அன்புக்கும் ஆதாரம் அது தானா?" என்றான் அவன், வானத்தை நோக்கி.

"ஆம், ஆம்!" என்பதுபோல் தன் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தது மச்சு வீட்டுக் குழந்தை!