பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டு வா, நாயை!

483

வீட்டுக்குப் போய்க் கொண்டு எப்படிக் கொண்டு வருவது? என்றும் அவருடைய வீடு என்ன, பக்கத்திலா இருக்கிறது?

அந்தரங்கக் காரியதரிசி விரும்பினால் வெளிக்குப் போய்விட்டு வரக்கூடக் கார் கிடைக்கும்; எனக்குக் கிடைக்குமா? - நாயைக் கொண்டு வரத்தான்!

அதிலும் பாருங்கள், என்னுடைய வேலையோ கணக்கெழுதும் வேலை-கணக்கு எழுதும் வேலை என்றால் சாதாரணக் கணக்கு எழுதும் வேலையா? - அதுவும் இல்லை ; வராத வரவுக்கும், செய்யாத செலவுக்குமல்லவா நான் கணக்கு எழுத வேண்டியிருக்கிறது?

எனவே, கணக்குக்கும் எனக்கும் வேண்டுமானால் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்; நாய்க்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

‘முன்னாள் காரியதரிசி'யான அந்த நாயை, 'இந்நாள் காரியதரிசி'யான அவர் வேண்டுமானாலும் கொண்டுவரட்டுமே!

இப்படி நினைத்த நான், அந்தரங்கக் காரியதரிசியின் அறையை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தேன்; அவரைக் காணவில்லை!

முதலாளி வருவதற்கு முன்னால் வந்து விடுபவராயிற்றே அவர்? இன்று ஏன் அவர் வந்தபிறகும் வரவில்லை ?

ஒன்றும் புரியவில்லை எனக்கு; முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பினேன்.

ஆபீஸ் பையன், "உங்களுக்குத் தெரியாதா?" என் வாயெல்லாம் பல்லாக,

"தெரியாதே!" என்று ஒரு கைக்கு இரண்டு கைகளாக விரித்தேன், நான்.

"இவ்வளவுதானா நீங்கள். நேற்றிரவு, 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற பெருநோக்கோடு, முன்பின் தெரியாத யாரோ ஒரு 'புது முகத்தை' முதலாளியிடம் அனுப்பியிருக்கிறார் ஒருவர். அந்தரங்கக் காரியதரிசியிடம் வந்து, 'முதலாளியைப் பார்க்க வேண்டும்' என்று சொல்லியிருக்கிறாள். அவளைப் பார்த்த அந்தரங்கக் காரியதரிசிக்கு அந்த நேரத்தில் எப்படி இருந்ததோ என்னவோ, 'நான் தான் முதலாளி!' என்று சொல்லி, அவளை அகலிகையாகவும் தன்னை இந்திரனாகவும் பாவித்துக் கொண்டு, அந்த 'இந்திரன் செய்த வேலை’யையும் செய்து விட்டிருக்கிறார்;