பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊமைப் பட்டாசு

495

இவரு! இவரைக் கேட்காம நீ எப்படிடா இங்கே வரலாம்? போ, மரியாதையா திரும்பிப் போ!" என்றான் அவன்.

இவன் திரும்பினான்.

"என்னாம்மா, நைஸா நழுவுறே? கையிலே இருக்கிற பட்டாசையெல்லாம் கீழே போட்டுட்டுப் போம்மா! இல்லேன்னா, மூக்கு வெத்திலைப் பாக்கு போட்டுக்கும்!” என்று தன் மூஷ்டியை மூக்குக்கு நேராக உயர்த்திக் காட்டினான் அவன்.

இவன் மூக்கு வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதை விரும்பாமலோ என்னவோ, கையிலிருந்த பட்டாசுகளையெல்லாம் அவனுக்கு முன்னால் போட்டுவிட்டு அப்படியே நின்றான்.

வெற்றிப் புன்னகை முகத்தில் அரும்பச் சுற்று முற்றும் பார்த்தான் அவன், தீக்கு ஏதாவது வழி பிறக்குமா என்று. அப்போது அந்த வழியாக வந்த மைனர் ஒருவர் தன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கடைசியாக ஒர் இழுப்பு இழுத்து விட்டுத் தெருவோரமாக விட்டெறிந்துவிட்டுப் போனார். ஆவலுடன் ஒடிச் சென்று அதை எடுத்துக்கொண்டு வந்து பட்டாசின் திரியிலே வைத்துவிட்டுக் காதைப் பொத்திக் கொண்டான் அவன்-'டமார்!’ என்று அது வெடிக்கப் போகும் சத்தத்தை எதிர்பார்த்து.

ஆனால் என்ன ஏமாற்றம்!-ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி வைத்ததுதான் மிச்சம்; ஒன்று கூட வெடிக்கவில்லை!

"அடகடவுளே, எல்லாமே ஊமைப் பட்டாசாயில்லே போச்சு!" என்று சொல்லிக்கொண்டே ஏமாற்றத்துடன் திரும்பினான் அவன்.

அவனுடைய ஏமாற்றம் அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது இவனுக்கு: கைகொட்டிச் சிரித்தான்.

என்ன அவமானம், என்ன அவமானம்! ஆத்திரம் தாங்கவில்லை சமர்த்துக்கு அடித்து நொறுக்கி விட்டது சப்பாணியை!

அவ்வளவுதான்; "பேபேபே, பேபேபே" என்று அலற ஆரம்பித்து விட்டது சப்பாணி.

அப்போதுதான் எனக்கும் தெரிந்தது, இது ஊமையென்று!

"அட பாவி, நீயும் ஊமையா?" என்று கேட்டான் அவன்.

அதற்கும் பதில் இல்லை இவனிடமிருந்து, "பேபேபே, பேபேபே" என்று அழுவதைத் தவிர!