பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாந்தி எங்கே?

பொங்கலுக்கு முதல் நாள்; அந்தத் தெருவிலிருந்து சென்ற வருடம் கல்யாணம் செய்துகொண்டு சென்ற பெண்களெல்லாம் தங்கள் கணவன்மாருடன் தாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள், பொங்கலைத் தங்கள் பிறந்த வீட்டில் கொண்டாட!

அவர்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமுதாவுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, தன் கண்களில் துளிர்த்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

"நல்ல நாளும் அதுவுமாக ஆரம்பித்துவிட்டாயா, மூக்கைச் சிந்த? எல்லாம் உன்னால் வந்தவினைதானே?" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார் ஆலாலசுந்தரம்.

ஆம், அமுதாவால் வந்த வினைதான் அது-அவள்தான் என்ன செய்வாள், பாவம்! அவளுக்கென்று இருந்த ஒரே ஒரு பெண், தனக்கென்று ஒருவனைத் தானே தேடிக்கொள்ள முயன்றபோது, அவளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை; தடுக்கக்கூடியதாக அது இருக்கவும் இல்லை. அவளுடைய கடந்த காலக் கதைதான்!

கதையென்றால் ஒரே இதழில் முடிந்து விடும் சிறுகதையாகவும் இருக்கவில்லை, அது; தொடர்கதையாக இருந்தது.

அவளுக்கும் கல்யாணமாகி இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆயினும், அந்தக்கதை இன்னும் முடியவில்லை; தொடர்ந்து கொண்டே இருந்தது!

இளம் பிராயத்தில் அவளுடைய இதயத்தில் எப்படியோ இடம் பெற்றுவிட்ட அந்த இனியவன், இப்பொழுதும்கூட எப்பொழுதாவது ஒரு நாள் அவளைத் தேடிக்கொண்டு வருவான். "எங்கே வந்தாய்?" என்று கேட்டால், "ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்று ஏதோ ஒரு விதமாகச் சிரித்துக்கொண்டே போய் விடுவான்.

அவனுடைய சிரிப்பு நெருப்பாயிருக்கும், அவளுக்கு: தண்ணீரால் அணைக்க முடியாத அந்த நெருப்பைக் கண்ணிரால் அணைப்பாள்.

வி.க. -32