பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாந்தி எங்கே?

5O1

குறையக் கூடாது' என்று பிள்ளையைப் பெற்றவர் சொன்னால், 'மேலே போகலாமோ, இல்லையோ?' என்று பெண்ணைப் பெற்றவர் கேட்க வேண்டும். 'வெள்ளிப் பாத்திரங்களுக்கென்று ஐயாயிரம் ரூபாய் எடுத்து வைக்க முடியுமோ, உம்மால்?’ என்று அவர் கேட்டால், 'எடுத்து வைக்கிறேன், யாராவது ஏமாந்தால்!' என்று இவர் சொல்ல வேண்டும். எல்லாம் ஒத்து வரும்போது பெண்ணின் வயது ஒத்து வராமற்போய், இரண்டாந்தாரமாகவோ மூன்றாந்தாரமாகவோ எவன் தலையிலாவது கட்டி வைக்க வேண்டும்-இதற் கிடையில், 'எனக்கு ஒன்றும் வேண்டாம்; உங்கள் பெண்ணைக் கொடுங்கள், போதும்!’ என்று நீ வந்து நின்றால் அவர் உனக்குக் கொடுக்கவா போகிறார்? -ஊஹாம், அப்பாக்களின் சரித்திரத்திலேயே அது கிடையாதே

'தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை, உரையும் இல்லை' என்பதுபோல, அவர் தேடாத மாப்பிள்ளைக்கு எது இருந்து என்ன பிரயோசனம்?

அதற்காக?-தனக்குக் காதற் பரிசாகக் கிடைத்த கண்ணீர், தன் மகளுக்கும் கிடைக்க வேண்டுமா, என்ன?-இது நடக்காது; அடுக்காது!

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவனைத் தானும் ஒரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது, அவளுக்கு. 'பொழுது எப்போது விடியும், பொழுது எப்போது விடியும்?' என்று காத்துக் கொண்டிருந்தாள்: விடிந்தது. 'மாலை எப்போது மலரும், மாலை எப்போது மலரும்?' என்று பார்த்துக் கொண்டிருந்தாள்; மலர்ந்தது.

அதற்குள் தன் அலங்காரங்களையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டு விட்ட தாரா, "அம்மா, அம்மா! இன்று பாலர் அரங்கில் எங்களுக்காக ஏதோ ஒரு படம் போட்டுக் காட்டுகிறார்களாம், அம்மா! போய்விட்டு வரட்டுமா, அம்மா?" என்றாள், அடிக்கோர் அம்மாவைப் போட்டு.

"போய் வா!" என்று ஏதும் அறியாதவள்போல் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, அவள் சென்ற அரை மணி நேரத்துக்கெல்லாம் அவளுக்குத் தெரியாமல் அவளைத் தொடர்ந்தாள் அமுதா. அங்கே.....

ரதியும் மன்மதனுமாகவல்லவா காட்சி தருகிறார்கள், அவர்கள்!