பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாந்தி எங்கே?

503

இந்த வர்ணனை 'நிற்கும், நிற்கும்' என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் அமுதா; நிற்கவில்லை. அத்துடன் தான் அதுவரைகடைப்பிடித்து வந்த பொறுமை வேறு தன்னைக் கைவிட்டு விடவே, "என்ன இருந்து என்ன பிரயோசனம்? மனம் இருக்க வேண்டாமா?" என்று இடைமறித்துக் கேட்டுக் கொண்டே அடுக்களையை விட்டு அவள் வெளியே வந்தாள்.

"மனம் இல்லாமல் எங்கே போயிற்றாம்?" என்று கேட்டுக்கொண்டே அவளை நோக்கித் திரும்பினார் ஆலாலசுந்தரம்.

"சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?"

கேள்விக்குப்பதில் கிடைக்கவில்லை அவரிடமிருந்து; அதற்குப் பதிலாக இன்னொரு கேள்விதான் பிறந்தது.

“என்ன புதிர் போடுகிறாய்?"

"நானும் புதிர் போடவில்லை; அவளும் புத்தி கெட்டுப் போய்விடவில்லை-பையன் நன்றாய்த்தான் இருக்கிறான்; இவளுக்கு ஏற்றவன்தான் அவன்!"

"எவன்?"

"எவனிடம் அவள் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாளோ, அவன்!"

இந்தச்சமயத்தில் தன்னையும் மீறி, "அம்மா!" என்று கத்தினாள் தாரா.

“என்னடி?" என்றாள்.அமுதா.

"நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, அம்மா?"

"ஆமாம், பார்த்தேன்!" என்றாள் அவள்!"

அவ்வளவுதான்; அவளை அப்படியே சேர்த்துக்கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டாள் தாரா.

"இது நடக்காது. என் உடம்பில் உயிருள்ள வரை இது நடக்கவே நடக்காது" என்றார் ஆலாலசுந்தரம், அழுத்தம் திருத்தமாக.

ஆனால் தன்னைப்போலவே தன் மனைவியும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அப்போது அறியவில்லை-எப்படி அறிய முடியும்?