பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



504

விந்தன் கதைகள்

கடைசியில் வெற்றி 'சிவ'னுக்குக் கிட்டவில்லை, 'சக்தி'க்குத்தான் கிட்டிற்று-ஆம், ஒரு நாள் இரவு தாயின் ஆசியுடன் தந்தைக்குத் தெரியாமல் தன் வீட்டை விட்டு வெளியேறிய தாரா, மறுநாள் காலை தன்னுடைய திருமணத்தைத் திருநீர்மலையில் வைத்து முடித்துக்கொண்டு வந்துவிட்டாள், தன் தந்தையின் தண்டனை எதுவாயிருந்தாலும் அதைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு விடுவது என்ற தைரியத்துடன்!

இருவரும் எதிர்பாராதவிதமாக வந்து தன்னுடைய கால்களைப் பற்றிக்கொண்டு, "எங்களை மன்னியுங்கள்; மன்னித்து ஆசீர்வதியுங்கள்" என்று கேட்டுக்கொண்டேபோது, ஆலாலசுந்தரம் அவர்களை மன்னிக்கவுமில்லை; மன்னித்து ஆசீர்வதிக்கவுமில்லை. அந்தக் கணமே அவர்கள் இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளித் தன் வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு விட்டதோடு, இதயக் கதவையும் சாத்திக்கொண்டு விட்டார்!

அதற்குப்பின்அந்த வீட்டில் அடித்த புயல், இடித்த இடி, பெய்த மழை எல்லாவற்றுக்கும் தன்னை மட்டுமே ஈடு கொடுத்துக்கொண்ட அமுதா, சற்றே நிலை சாய்ந்து நின்றாலும் தலை சாய்ந்து விடவில்லை!

இது நடந்தது சென்ற வருடத்தில்-இன்று, பொங்கலுக்கு முதல் நாளான இன்று-இன்று கூடவா திறக்கக் கூடாது, இந்த வீட்டுக் கதவு அந்தக் குழந்தைகளுக்காக?

அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்கள் அவர்கள், ஒருவருக்கொருவர் அன்பு கொண்ட குற்றத்தைத் தவிர?

'எதற்கும் ஒரு வார்த்தை சொல்லித்தான் பார்ப்போமே?' என்று தோன்றிற்று அவளுக்கு; சொன்னாள்-அவ்வளவுதான்; "போய் உன் வேலையைப் பார்!" என்று போட்டாரே ஒரு சத்தம் பார்க்கலாம்-அதிர்வெடிச் சத்தங்கூட அல்லவா அந்தச் சத்தத்துக்கு முன்னால் நிற்காதுபோலிருக்கிறது!

கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் விட்டது, அவளுக்கு. இனிப் பயனில்லை; இவரை நம்பி இனிப் பயனில்லை-தன்னுடைய கடமைக்காவது, தன்னுடைய பங்குக்காவது, தான் ஏதாவது செய்துதான் தீரவேண்டும்.அதை இங்கே வரவழைத்துத்தான் செய்ய வேண்டுமா, என்ன? அங்கேயே போய்ச் செய்துவிட்டு வந்தால் என்னவாம்?