பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏசு நாதரின் வாக்கு

509

அன்று நோயாளிகள் அனவரையும் பார்த்துவிட்டு டாக்டர் ஞானப்பிரகாசம் தம்முடைய அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, "ஐயா, காப்பாற்றுங்கள்! தயவு செய்து காப்பாற்றுங்கள்! யாரோ ஒரு பாவி என் மகன்மேல் காரை ஏற்றிவிட்டுக் காற்றாய்ப் பறந்துவிட்டான்!-காப்பாற்றுங்கள் ஐயா, தயவு செய்து என் மகனைக் காப்பாற்றுங்கள் ஐயா!" என்ற அவலக் குரல் கேட்டு நின்றார்.

தலைவிரி கோலமாக இருந்த யாரோ ஒரு தாய், பலத்த காயங்களுக்குள்ளான பத்து வயதுப் பாலகன் ஒருவனைக் கைகளில் ஏந்தியபடி, கண்ணீரும் கம்பலையுமாக அவரை நோக்கித் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள்.

"இது ஆஸ்பத்திரி இல்லை அம்மா, நர்ஸிங் ஹோம்! இங்கே யாருக்கும் இனாமாக வைத்தியம் செய்யமாட்டார்கள்; போ, ஆஸ்பத்திரிக்குப் போ!"என்றார் டாக்டர், அவளைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு.

"ஆஸ்பத்திரிக்குப் போகும் வரை என் மகன் உயிர் தரித்திருக்க மாட்டான் போலிருக்கிறது; காப்பாற்றுங்கள் ஐயா, தயவு செய்து காப்பாற்றுங்கள்!"என்று 'கெஞ்சு, கெஞ்சு' என்று கெஞ்சினாள் தாய்.

"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? போபோ, ஆஸ்பத்திரிக்குப் போ!"

டாக்டர் தம் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு மேலே நடந்தார்.

"நில்லுங்கள்; இந்த ரத்தப் பெருக்கையாவது முதலில் நிறுத்துங்கள்!” என்றாள்.தாய், தன்கண்களைக் குளமாக்கிக்கொண்டு.

டாக்டர் திரும்பினார்.

"பணம் வைத்திருக்கிறாயா, பணம்?"

"பணமா? காய்கறி விற்பவள் நான்;என்னிடம் ஏது ஐயா பணம்? உங்களுக்குப் புண்ணியமுண்டு, பெருகி வரும் இந்த ரத்தத்தை மட்டும் எப்படியாவது நிறுத்திவிடுங்கள்; அதற்குப் பிறகு வேண்டுமானால் இவனை நான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விடுகிறேன்!"

"பைத்தியக்காரி!வாழ்க்கையில் வரவு வைப்பது பாவம்; செலவு வைப்பது புண்ணியம். இதுகூடத் தெரியாதா, உனக்கு? போபோ, ஆஸ்பத்திரிக்குப் போ!"