பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

விந்தன் கதைகள்

"போகிறேன்; ரத்தத்தை நிறுத்துங்கள்! அதற்காக இதோஎன்னிடமுள்ள காசு!" என்று தன் மடியிலிருந்த இருபது பைசாக்களை எடுத்து அவரிடம் நீட்டினாள் தாய்.

டாக்டர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்:

"இந்தக் காசை நீயே வைத்துக்கொள்; வெற்றிலை பாக்குப் புகையிலைக்கு உதவும்!"

தன்னைத்தான் பரிகசிக்கிறார் என்றால், தன்னுடைய ஏழ்மையையும் இல்லாமையையுமல்லவா பரிகசிக்கிறார், இந்த டாக்டர்?-அந்த இருபது காசு, இருபது காசாகத்தான் தெரிகிறதே தவிர, அதிலுள்ளதாய்மை உணர்ச்சி தெரியவில்லையே, இவருக்கு?

இப்படி நினைத்தாளோ இல்லையோ, அதுவரை பசுவாயிருந்த அவள் இப்போது புலியானாள்; புலியாகிச் சொன்னாள்:

"அட, பாவி பிள்ளை-குட்டி பெறாதவனா, நீ? ஈவு, இரக்கம் என்பதே கிடையாதா, உனக்கு?"

"கிடையாது; என்னிடம் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது!-உலகம் என்னிடம் ஈவு, இரக்கம் காட்டாதபோது, அதனிடம் நான் மட்டும் ஏன் காட்ட வேண்டுமாம்?-கிடையாது; என்னிடம் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது!”

அழுத்தந் திருத்தமாக இதைச் சொல்லிவிட்டுத் தம் அறைக் கதவைப் 'பட்'டென்று அடைத்துக் கொண்டுவிட்டார் டாக்டர்:

அப்போதுதான் அந்த அழுகைச் சத்தம்- தமது மகன் அருளானந்தத்தின் அழுகைச் சத்தம் அவருடைய காதில் விழுந்தது-சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்தார்.

'காவ், காவ்' என்று கத்தும் கால் ஒடிந்த நாய்க்குட்டியுடன் அவன் அழுதபடி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“ஏண்டா, அழுகிறாய்?"

"யாரோ ஒரு மடையன் இந்த நாய்க்குட்டியின் மேல் ஸைக்கிளை ஏற்றிவிட்டுப் போய்விட்டான், அப்பா!"

"அதற்கு நீ ஏன் அழவேண்டுமாம்?"

"போப்பா!'உருவம் எப்படியிருந்தாலும் உயிர் எல்லா வற்றுக்கும் ஒன்றே!'என்று நம் பாதிரியார் சொல்லவில்லையா? அதனால் இதன் உயிர் துடிக்கும் போது என்னுடைய உயிரும் துடிக்கிறது!"

"துடித்தால் துடிக்கட்டும்; நீ அதைத் தூக்கித்தூர எறிந்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போ!"