பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருந்திய திருமணம்

517

சிவதானபுரத்தைச்சேர்ந்த சிதம்பரம் எதையுமே வேடிக்கையாக எடுத்துக் கொள்பவர். இன்பத்தில் துன்பத்தையும், துன்பத்தில் இன்பத்தையும் காண்பது அவருடைய இயல்பு.

இந்த இயல்பு சிவகாமிக்கும் பிடித்தே இருந்தது - கல்யாணத்துக்கு முன்னால் காதலை வளர்த்துக் கல்யாணத்துக்குப் பின்னால் காதலைக் கொல்லாமல் இருந்ததால்!

ஆனால் சிகாமணிக்கோ இதெல்லாம் பிடிப்பதில்லை. அவன் எடுத்ததற்கெல்லாம் சிந்தித்தான், சிந்தித்தான், சிந்தித்துக் கொண்டே இருந்தான். இந்தச் சிந்தனையின் காரணமாகக் கலாசாலையில் காலடி எடுத்து வைத்ததும் அவன் முதன் முதலாக கண்டுபிடித்த உண்மை; அப்பா ஒரு முட்டாள்; அம்மா ஓர் அசடு!"என்பதாகும்.

அந்த முட்டாளும், அசடும் சேர்ந்து தனக்குக் கல்யாணம் செய்வதை அவன் விரும்புவானா? விரும்பினால் பகுத்தறிவு மிக்க அவன் பள்ளி நண்பர்கள் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்களை வெள்ளிப் பாத்திரங்களென்றும், அந்த வெள்ளிப் பாத்திரங்களின் மேல் படியும் அறியாமை என்னும் அழுக்கை எளிதில் துடைத்து விடலாமென்றும், அவர்களுடைய பெற்றோர் பித்தளைப் பாத்திரங்களென்றும், அந்தப் பித்தளைப் பாத்திரங்களின் மேல் ஏறியிருக்கும் அறியாமை என்னும் களிம்பை அகற்றுவது அவ்வளவு எளிதல்லவென்றும், அந்தப் பணியை மேற்கொள்ளும் இளைஞர் சமுதாயம் அதைப் படிப்படியாகத்தான் அகற்ற முடியுமென்றும் அடிக்கடி விளக்கிவரும் அரும் பெரும் தலைவர் ஆசிரியர் அறிவழகனார்தான் அவனைப்பற்றி என்ன நினைப்பார்?

சிந்தித்தான், சிந்தித்தான், சிந்தித்துக் கொண்டே இருந்தான்' சிகாமணி - இல்லை முடிமணி!

"இன்னும் என்ன யோசனை? நான்தான் அந்த முல்லையையே உனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறேன் என்கிறேனே?" என்றார் சிதம்பரம்.

"கல்யாணம், கல்யாணம் என்று சொல்லாதீர்கள் அப்பா!காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறது!"

“சரி, தேனாகப் பாயும் திருமணம்தான் செய்து கொள்ளேன்!"

"திருமணம் என்றால் 'திருந்திய திருமணம்' தான் செய்து கொள்வேன்; சம்மதமா?”

"அது என்ன திருமணம்?"