பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

518

விந்தன் கதைகள்

"பழைய சடங்குகளையும் பழைய சம்பிரதாயங்களையும் உடைத்தெறியும் திருமணம்!”

"அப்படியென்றால் புதிய சடங்குகளையும் புதிய சம்பிரதாயங்களையும் உருவாக்கும் திருமணமா?"

'சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"

சிகாமணி உட்கார்ந்தான்.

"சிந்திக்க ஆரம்பித்து விட்டாயா, என்ன?"என்றார் சிதம்பரம் திடுக்கிட்டு.

"ஆம்; சிந்திக்கிறேன், சிந்திக்கிறேன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்!” என்றான் சிகாமணி.

"நானும் போகிறேன், போகிறேன் போய்க் கொண்டே இருக்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே குடையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் சிதம்பரம்.

"எங்கே போகிறீர்கள்?"என்றான் சிகாமணி விசுக்கென்று எழுந்து.

"புரோகிதர் வீட்டுக்கு!"

"புரோகிதர் வீட்டுக்கா திருந்திய திருமணத்தில் அவருக்கு ஏது இடம்? ஆசிரியர் அறிவழகனார் வீட்டுக்கு வேண்டுமானால் போய் விட்டு வாருங்கள்!"

"ஏன் அவரே இப்பொழுது புரோகிதராகிவிட்டாரா?"

"இது சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"

சிகாமணி உட்கார்ந்தான்.

"சிந்திக்க ஆரம்பித்து விட்டாயா, என்ன?"என்றார் சிதம்பரம் மறுபடியும் திடுக்கிட்டு!

"ஆம், சிந்திக்கிறேன், சிந்திக்கிறேன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்!” என்றான் சிகாமணி.

"ஆஆஆ.." என்றார் சிதம்பரம் தமது, கைவிரல்களைச் சொடுக்கிக் கொண்டே.

"என்ன அப்பா அது?" என்றான் அவன், சிந்தனையைச் சற்றே கலைத்து!