பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

522

விந்தன் கதைகள்

"அப்படியே குறித்தாலும் அதைத் திருமண அழைப்பிதழில் குறிக்கக் கூடாது; அதுதானே உங்கள் குறிக்கோள்?"

"ஆம், ஆம்!”

"அருமையான திட்டம்; அந்தத் திட்டத்தில் அடியேனும் ஒரு திருத்தம் கொண்டு வரலாமோ?”

“என்ன திருத்தம் எந்தையே?”

"நாள் பார்க்கும் போது ஒரே நாளில் இரண்டு முகூர்த்தங்கள் உள்ள நாளாகப் பார்த்துவிட வேண்டியது. அப்படிப் பார்க்கும்போது 11/2-3 கும்ப லக்கினம் என்று இருந்தால் இன்னொன்று 9-101/2 சிம்ம லக்கினம் என்று இருக்கும். அறியாமை மிக்க அன்னையின் திருப்திக்காக 11/2-3 முகூர்த்தத்தில் யாருக்கும் தெரியாமல் தாலியைக் கட்டிவிட வேண்டியது. அறிவு மிக்க ஆசிரியர் பெருமகனாரின் திருப்திக்காக 9-101/2 முகூர்த்தத்தில் முகூர்த்தம் என்று சொல்லாமல் மாலை மாற்றிக் கொண்டு விடவேண்டியது. இதுவே திருத்தம். என் இன்னுயிர் இளவலே!"

“தேவையில்லாத திருத்தம்; எங்கள் திறமைக்கு மாசு கற்பிக்கும் திருத்தம்; எந்தையே, இது எங்கள் திட்டத்தின் இரண்டாவது விதி; ஏற்கனவே எங்களால் திருத்தங் கொண்டு வரப்பட்டு, எங்கள் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி!"

"என்னே என் அறியாமை! இதற்குத்தான்பகுத்தறிவு வேண்டும் போலும்!”

"உங்களைப் போன்றவர்கள் அதைப் படிப்படியாக அடைய வேண்டுமென்பதற்காகவே இந்த அந்தரங்க விதி!"

"விதியோ, சதியோ! நீங்கள் போய் வேலையைப் பாருங்கள்!" என்றாள் சிவகாமி.

அதற்குமேல் சிதம்பரம் அங்கு நிற்கவில்லை.

"வாழ்க, திருத்தம்! வாழ்க;சீர்திருத்தம்!"என்று முழங்கிக் கொண்டே புரோகிதரின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

அன்று மாலை சிந்தனைப் புயலில் சிக்குண்டு வந்த சிகாமணியை நோக்கி, "என்ன தம்பி என்ன?"என்று வினவினார் அண்ணா அறிவழகனார்.

"திருந்திய திருமணத்தில் ஓர் திடீர் ஐயம்?”