பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

528

விந்தன் கதைகள்

இவனுக்கு ஏகப் பசி;இவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்து உங்கள் காரை நெருங்குகிறான்; பின் 'ஸீட்டின்' மேல் தட்டிலிருக்கும் ரொட்டியை எடுத்துப் பிட்டுப் பிட்டுத் தின்கிறான். அப்போது இதோ இருக்கிறாரே - இந்தப் போலீஸ்காரர் வந்து 'திருட்டுப் பயலே அகப்பட்டுக் கொண்டாயா?' என்று இவனைப் பிடித்துக் கொள்கிறார். அந்தச் சமயத்தில் நீங்கள் வருகிறீர்கள்; பையனையும் போலீஸ்காரரையும் மாறி மாறிப் பார்க்கிறீர்கள். நடந்தது இதுதான் என்று உங்களுக்குத் தெரிகிறது. 'ஐயோ பாவம்!' என்று இவனிடம் அனுதாபம் கொள்கிறீர்கள். உடனே உங்களுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, "அவனை விடுங்கள்; அவனுக்குத் தின்ன ரொட்டி கொடுத்தது நான்தான்!” என்று சொல்கிறீர்கள்; போலீஸ்காரர் பையனை விட்டு விட்டுச் செல்கிறார்; நீங்கள் இவனை நெருங்குகிறீர்கள்; 'ரொட்டி போதுமா, இன்னும் வேண்டுமா?' என்று கனிவுடன் கேட்கிறீர்கள். இவனுக்கு ஒரே வியப்பு;'இப்படியும் ஒரு தெய்வம் உண்டா, இந்த உலகத்தில்?’ என்று உங்களைப் பார்க்கிறான். இவனுடைய கண்களில் நீர் மல்குகிறது; அதை நீங்கள் அன்புடன் துடைக்கிறீர்கள். இதுதான் இன்று எடுக்கப்போகும் காட்சி!"என்றார் கும்கும்மை நோக்கி.

"சரி, இவனுடைய கண்ணிரைத்துடைக்கிறேன். அதற்குப் பிறகு இவனை நான் காதலிக்கிறேனா?"என்றாள் அவள். தன்னுடைய 'மேதாவிலாச'த்தைச் சற்றே வெளிப்படுத்தி!

"அது எனக்குத் தெரியாது; கதாசிரியரைத்தான் கேட்க வேண்டும்!' என்றார்.அவர் தற்காப்புக்காக.

"அவருடைய இஷ்டத்துக்காக இங்கே என்ன ஸார், நடக்கிறது? எல்லாம் நம்முடைய இஷடந்தானே?"

“என்ன இருந்தாலும் வயது என்று ஒன்று இருக்கிறது பாருங்கள். இவனோ சிறுவன்; நீங்களோ வயது வந்தவர்கள்...."

"அதனாலென்ன, அதுவும் ஒரு புதுமையாகயிருக்கட்டுமே!"

‘புதுமை' என்ற வார்த்தை காதில் விழுந்தது தான் தாமதம். ‘புதுமை எதுவாயிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் இருக்கிறேன்; நீங்கள் ஏறுங்கள், காரில்!” என்றார் படத் தயாரிப்பாளர்.

அவ்வளவுதான்; வெற்றிப் புன்னகையுடன் நடிகை கும்கும் காரில் ஏறி உட்கார்ந்தாள்.