பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிழைக்கத் தெரியாதவன்

547


'கிறிச்'சிட்டுக் கத்தினார் தீனதயாளர் - ரத்த வெள்ளத்திலே மார்பில் பாய்ந்த கத்தியுடன் கீழே விழுந்து கிடக்கும் கோபாலனின் உயிரற்ற உடலைப் பார்த்து.

"ஆம், நானேதான்!” என்பது போலிருந்தது, அந்த நிலையிலும் மலர்ந்திருந்த அவன் முகம்.

"பிழைக்கத் தெரியாதவன்; பிழைப்பின் ரகசியத்தை அறியாதவன்" என்றார் அவர் பெருமூச்சுடன்.

"ஏன், என்ன நடந்தது?" என்று கேட்டுக் கொண்டே வந்தார், 'இரும்பு பெர்மிட்'டுக்காக அவருடன் 'இரண்டறக் கலந்து' பேச வந்த இரும்பு வியாபாரி ஒருவர்.

நடந்ததைச் சொன்னார் தியாகி தீனதயாளர்.

"கிடக்கிறான் விடுங்கள்! இப்படி ஏதாவது செய்து விட்டால் இவனுக்காக யாராவது வெண்கலச் சிலை செய்து வைத்து விடுவார்களா என்ன? அப்படி ஏதாவது செய்து வைப்பதாயிருந்தால் தங்களைப் போன்ற தியாகி சிகரங்களுக்கல்லவா செய்து வைக்க வேண்டும்?" என்றார் அவர் வந்த அவசரத்தில் அவிழ்ந்து தொங்கிய தம் சிண்டைத் தட்டி முடிந்து கொண்டே!