பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஆபீஸாப்பியாசம்"

341

இடையே கோயில்கள் வேறு வந்து குறுக்கிடும். வாத்தியார் வைத்தியலிங்கம் பிள்ளையைவிட எத்தனையோ விதத்தில் உயர்ந்தவர்கள் பலர் காரிலும் மற்ற வாகனங்களிலும் அதே ரஸ்தாவில்தான் சென்று கொண்டிருப்பார்கள், அவர்களெல்லாம் தங்களைக் குறுக்கிடும் கோயில்களைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. இந்த விஷயத்தில் வாத்தியார் வைத்தியலிங்கம் மட்டும் அவர்களுக்கு நேர் விரோதம். எந்தக் கோயிலைக் கண்டாலும் சரி, உடனே தமது பாதரட்சைகளைக் கழற்றிக் கீழேவிட்டு விட்டு, பவ்யமாக ஒரு 'கும்பிடு' போட்டுவிட்டுத்தான் அப்பால் செல்வார். விஷ்ணு கோயில், சிவன் கோயிலாயிருந்தால் இந்த ஒரே ஒரு கும்பிடோடு சரி - விநாயகராயிருந்துவிட்டாலோ தொல்லை தான் - பிரதட்சணம் வருவதோடு தோப்புக்கரணம் வேறு போட வேண்டும்; காதைப் பிடித்துக் கொள்வதோடு கன்னத்தில் வேறு போட்டுக் கொள்ள வேண்டும். இதெல்லாம்தான் போகட்டும் என்றால், தலையிலாவது குட்டிக் கொள்ளாமல் இருப்பார் என்கிறீர்களா - அதுதான் கிடையாது! - எண்ணி மூன்று குட்டுகள் குட்டிக் கொள்ளாமல் அடுத்தடி வைக்கமாட்டார்!

இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேற்கண்டவாறு கோயிலுக்குக் கோயில் நின்று தொழுது சென்ற வாத்தியார் பூலோகத்தில் நரகத்தைக் கண்டார்; தொழாமலே சென்றவர்களோ, சொர்க்கத்தைக் கண்டார்கள்!

து இருந்தாலும் எது இல்லாமற் போனாலும் வாத்தியார் வைத்தியலிங்கம் எத்தனையோ விதத்தில் கொடுத்து வைத்தவர். தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகும் வரை தாங்கள் இருந்தால் போதும் என்று பகவானை அல்லும் பகலும் அனவரதமும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்த அவருடைய பெற்றோர், அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்துங்கூட உயிருடன் இருந்தார்கள்; கல்யாணம் பண்ணிக்கொண்டு புக்ககம் போனதங்கை, அண்ணாவை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க மனமில்லாமலோ என்னவோ, அடுத்த வருஷமே விதவைக் கோலத்துடன்பிறந்தகம் வந்து சேர்ந்துவிட்டாள்; அவருடைய மனைவி மங்களமும் ஸ்ரீதனமாக ஒன்றும் கொண்டு வராமற் போகவில்லை - தன்னுடன் பெற்றோரையிழந்த இரண்டு தங்கைமாரைக் கட்டி கட்டியாகக் கொண்டு வந்திருந்தாள்!