பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதினோராம் அவதாரம்

549

“நாமெல்லாம் கூப்பிட்டா முருகரு வருவாரா? வள்ளி கூப்பிட்டா வருவாரு!" என்று சொல்லிக் கொண்டே, ஒரு தகரக் குவளை நிறையக் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள் மாரியாயி.

அந்தக் கஞ்சி உள்ளே போனபிறகு, "ஏன், மாரி காத்தாலே வைத்தியரைக் கூட்டிக்கிட்டு வரலே?" என்று கேட்டான் முத்தையா.

"அவரு வந்தாத்தானே? 'வர முடியாது போ!' என்று சொல்லிப்பிட்டாரு!"

"அப்புறம்...?"

"கையிலே யிருந்த நாலணாக் காசை எடுத்து உண்டியிலே போட்டேன்; 'உன் புருசன் உடம்புக்கு என்ன'ன்னு கேட்டாரு; 'சுரம்’னு சொன்னேன். நாலு பொட்டணம் மருந்தை மடித்துக் கொடுத்து, 'இதைத் தினம் ரெண்டு வேளை தேனிலே கொடு; ஆகாரம் பார்லி கஞ்சி மட்டுந்தான் கொடுக்கணும்’னு சொன்னாரு. நீ தான் பாயிலே படுத்துப் பத்து நாளாச்சே, கையிலே ஒரு சல்லிக் காசு ஏது? தேன் வாங்கிறதற்கும் காசில்லே, பார்லி வாங்கிறதற்கும் காசில்லே! அதாலேதான் உனக்கு இன்னிக்கு மருந்து கொடுக்கல்லே!" என்றாள் மாரியாயி.

"அப்படின்னா, நீ என்ன பண்ணப் போறே, மாரியாயி?”

"என்னத்தைப் பண்றது. இந்தக் கஞ்சிக்கலயத்தையும் தகரக் குவளையையும் நான் உன் தலை மாட்டிலேயே வைத்து விட்டுப் போறேன். பசிக்கிற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஊத்திக் குடிச்சுக்கோ. நான் காட்டுக்குப் போய் ஒரு சுமை கட்டையாச்சும் வெட்டி பட்டணத்துப் பக்கமாய் போய் வித்துப்பிட்டு வரேன். வரும்போது தேனும் பார்லியும் வாங்கிக்கிட்டு வரேன். அப்படிச் செஞ்சாத்தான் அடுத்த வீட்டுக்காரிட்டே வாங்சின அரைப்படி நெல்லையும் நாளைக்குத் திருப்பிக் கொடுக்க முடியும்; அவள் வாயிலிருந்தும் தப்பித்துக் கொள்ளமுடியும். சும்மா வீட்டிலே உட்கார்ந்துகிட்டு, உன்னை நானும், என்னை நீயும் பார்த்துக்கிட்டு இருந்தா உன் உடம்பு தேறுகிற வழிதான் எப்படி?”

"மாரியாயி; நீ சாதாரண மாரியாயி இல்லை; இந்த மகமாயி மாரியாயிதான்! இல்லாட்டிப் போனா இந்த ஒண்ணுமில்லாத பயலுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவியா. சீமையிலே இந்த