பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



550

விந்தன் கதைகள்

வெள்ளைகாரப் பயலுங்க இருக்கிறாங்களாமே, அவனுங்க பெண்டாட்டிமாருங்க 'ஊம்' என்கிறதற்கு 'ஆம்' என்கிறதற்கெல்லாம் கட்டிக்கிட்ட புருஷனை விட்டுட்டு, வேறே எவனாச்சையும் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிடுவாளுங்களாம்! ராசங்கங்கூட அது தான் ஞாயம்னு சட்டம் செஞ்சு வச்சிருக்குதாம்! - போனமாசம் நம்ம ஊருக்கு வந்திருந்துச்சே ஒரு பட்டணத்துப் பிள்ளை, அது சொல்லிச்சு. அந்த வெள்ளைக்காரிங்க என்ன தான் படிச்சுக் கிழிச்சவங்களாயிருந்தாலும் உனக்கு ஈடாவ முடியுமா? - என்னவோ, போ! கடவுள் விட்டவழி போய்ப் பார்த்துக் கிட்டுப் பொழுதோடே வந்துடு!" என்று மிக்க வேதனையுடன் சொல்லிக் கொண்டே மீண்டும் படுத்து விட்டான் முத்தையா.

மாரியாயியும் கையில் வெட்டுக் கத்தியைப் பிடித்துக் கொண்டு காட்டை நோக்கிக் கிளம்பி விட்டாள்.

கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்க நடந்து, காட்டை அடைந்தாள் மாரியாயி. கட்டையும் வெட்டினாள் கட்டும் கட்டினாள். அப்பாடி ஒரு ரூபாயாவது போகும்!” என்று நினைத்த போது, அவள் உள்ளம் இழுத்துச்சிம்மாடு சுத்தித்தலையில் வைத்துக் கொண்டே, காட்டிலாகா அதிகாரிகள் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தாள்; யாரையும் காணவில்லை. பிறகு, சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் நடந்தாள்.

கிராமத்தின் எல்லையைக் கடந்து பட்டணத்தின் எல்லையை அடைந்ததும் "விறகு அம்மா, விறகு!" என்று கூவிக் கொண்டே அவள் தெருத் தெருவாக அலைந்தாள்.

அங்கே ஒரு தெருவில் இருவர் குடிவெறியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வாய்ச்சண்டை முற்றி கைச்சண்டையில் இறங்கும் சமயம்; அந்த வழியே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கும், குடியர்கள் இருவரும் ஒருவரையொருவர் தங்களால் ஆன மட்டும் குத்திக் கொள்வதற்கும் சரியா யிருந்தது.

"முதல் தேதி நெருங்கிப் போச்சு; என்னடா நீ இன்னும் ஒரு கேசும் பிடிச்சுகிட்டு வரலேன்னு இன்ச்சிபெட்டரு ஐயா கேக்கறாரு! இவனுங்களையாச்சும் இன்னிக்குப் பிடிச்சுக்கிட்டுப் போவோமா?" என்றான் 101.