பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



554

விந்தன் கதைகள்

தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு எழுந்தான். 'திருதிரு' வென்று விழித்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தான்.

'படீர்' என்று ஒரு வெடி, பளிச்சென்று ஒரு மின்னல் பகவான் பிரத்தியட்சமானார்!

"நீங்க யாரு, சாமி ?" என்று வினயத்துடன் கேட்டான் முத்தையா. ஏனெனில், அதற்குமுன் அவன் பகவானைப் பார்த்ததில்லையல்லவா?

"தீனதயாளன் நான்; கருணாமூர்த்தி நான்; ஏழை பங்காளன் நான்..." என்று பகவான் ஆரம்பித்தார்.

"அப்படின்னா இந்த ஏழையைக் காப்பத்தத் தான் இப்போ..."

"ஆமாம்; இதற்கு முன் நான் பல உயிர்களைக் காப்பதற்காகப் பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறேன்; இப்போது அந்த ஈவிரக்கமற்ற அதிகார வர்க்கத்தினிடமிருந்து உன் மனைவியை மீட்டு வருவதற்காகச் 'சிறை வார்டராய்ப் பதினோராம் அவதாரம் எடுத்தேன், இதோ உன் மனைவி; இனி உங்களுக்குத் தீங்கு செய்பவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுடைய தலைகள் என் சக்ராயுதத்துக்கு இரையாகும்..."

"என்ன சாமி, என்ன சொன்னிங்க அந்த எமப் பயலுங்கக்கிட்ட இருந்து என் மாரியை மீட்டுக்கிட்டா வந்துட்டீங்க! ஆ! என் மாரி, மாரி!" என்று கூவிக் கொண்டே தன் மனைவியைக் கட்டி அணைத்தான் முத்தையா.

அவனுடைய அணைப்பில் யாரும் பிடிபடவில்லை! வெறித்துப் பார்த்தான் முத்தையா. எல்லாம் வெறும் கனவு!