பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பும் அதிகாரமும்

பாதுஷா லில்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று ஆப்கானிஸ்தானமே ஒரே கோலகலமாகக் காட்சியளித்தது. தங்களுடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் பாதுஷாவிடம் தெரிவித்துக் கொள்வதற்காக மந்திரிப் பிரதானிகள், சேனாதிபதிகள், ஜாகீர்தார்கள், கலைஞர்கள், கவிஞர்கள் எல்லோரும் அன்று ராஜ சபையில் பிரசன்னமாயிருந்தனர். ராணி ஜிஜியாவுடன் லில்லாவும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டான். கவி இஸாவை மட்டும் அதுவரை காணவில்லை.

பாதுஷாவின் புருவங்கள் சற்றே நெரிந்தன. அதே சமயத்தில் கவி இஸா ராஜ சபைக்குள் பிரவேசித்தான். என்றுமில்லாதபடி அன்று ஒரு மானும் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. சின்னஞ்சிறுகுட்டி முதல் கட்டி வளர்க்காத அந்தமானை - பலாத்காரத்தின் துணை அணுவளவுமின்றி அன்பின் துணை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு அன்று வரை வளர்த்து வந்த 'அல்லா' என்ற அந்த அருமை மானை - அன்று தான் முதன் முதலாக அரண்மனைக்குத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் இஸா.

அந்த மானைக் கண்ட மாத்திரத்தில் தன் மனதை அதனிடம் பறி கொடுத்து விட்டாள் ராணி ஜிஜியா. அவ்வளவுதான்! அவளுடைய அதரங்கள் ஒரு கணம் அரசனின் காதருகே சென்று ஏதோ முணுமுணுத்தன; அடுத்த கணம் பாதுஷாவின் முகத்தில் ஒர் அலட்சியப் புன்னகை மின்னி மறைந்தது.

இந்தக் காட்சியை கண்டதும் இஸாவுக்கு விஷயம் ஒருவாறு புரிந்துவிட்டது - அரசனாயிருக்கட்டும், அல்லது அவள் வேறு யாராகவாவது இருக்கட்டும் - அதிகாரத்திமிரையும், செல்வச் செருக்கையும் துணையாகக் கொண்டு, உலகத்தில் சகல விதமான காரியத்தையும் சாதித்துக் கொள்ளப் பார்க்கும் அக்கிரமம் இஸாவுக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. ஆகவே, ராணி ஜிஜியாவின் ஆக்கிரமிக்கும் ஆசையும், பாதுஷாவின் அலட்சியப் புன்னகையும் அவனுக்கு அடக்க முடியாத ஆத்திரத்தையளித்தன.

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த கணம் "இஸா...!" என்று அவனை அலட்சியமாக அழைத்தான் பாதுஷா. அப்பொழுது, அவனுடைய வலது கண்ணும் வலதுபக்கத்து மீசையும் சற்றே உயர்ந்து தாழ்ந்தன.