பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

592

விந்தன் கதைகள்

பார்த்தேன்; பக்கத்தில் புகைப்படக்காரருடன் தமிழ்ப்புயல் தயாநிதி எனக்குப் பின்னால் 'டாக்'ஸியில் வந்து கொண்டிருந்தார். அவரை நான் பொருட்படுத்தாவிட்டாலும் அவர் காட்டிய திசையைப் பொருட்படுத்திப் பார்த்தேன்; தீ, செந்தீ!

இந்தியால் மூட்டப்பட்ட செந்தீயா, அது?

"ஆம்; ஐயமில்லை அப்பனே, ஐயமில்லை, அந்த தீக்குள்ளிருந்து தான் அந்த இளவலின் குரல் வருகிறது; எடும், அந்த அற்புதக் காட்சியை அப்படியே! என்றார் அவர், எனக்குப் பதில் சொல்வது போல் தமக்குப் பக்கத்திலிருந்த புகைப்படக்காரரிடம்.

"என்ன!" - திறந்த வாய் மூடுவதற்குள் சைக்கிளை விட்டுக் கீழே குதித்து விட்டேன் நான்; என்னைத் தொடர்ந்து தமிழ்ப்புயல் தயாநிதியும் தமது புகைப்படக்காரருடன் 'டாக்ஸி'யை விட்டுக் கீழே குதித்துவிட்டார்!

ஆனால்....ஆனால்...

என்ன விரைந்து என்ன பயன்? அவனுக்கு அருகே காலியாகக் கிடந்த 'பெட்ரோல் டின்னையும் இறைந்து கிடந்த தீக்குச்சிகளையும்தான் என்னால் பார்க்க முடிந்தது; அவனைப் பார்க்க முடியவில்லை!

ஆம்; அதற்குள் அவன் குரல் அந்தத் தீயிலே மங்கி மறைந்துவிட்டது; அவன் இன்னுயிரும் பொன்னுடலும் கூட உருகிக் கரைந்து, கருகி உதிர்ந்து, உருத் தெரியாமல் மறைந்துவிட்டன!

"ஐயோ, தமிழ்மாறா! உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு வெறியூட்டும் வீணர்கள் தமிழால் வாழும்போது, அதே தமிழால் நீங்கள் ஏன் சாக வேண்டும்?"

வாய் விட்டுக் கதறினேன் நான்! என்னுடைய கதறலைக் கேட்டோ என்னவோ அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அலறி எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

அதே சமயத்தில் எங்களுக்கு எதிரே போலீஸ் லாரி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து பத்துப் பதினைந்து போலீஸ்காரர்கள் குண்டாந்தடிகள் சகிதம் இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க, அவர்களைத் தொடர்ந்து வந்த இன்ஸ்பெக்டர், "இந்தத் தற்கொலைக்கு இவனை யார் தூண்டிவிட்டது? சொல்லுங்கள், யார் தூண்டிவிட்டது இவனை!" என்று கர்ஜித்தார், கடமையில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தி.