பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

594

விந்தன் கதைகள்

அப்போதும் அவருடைய கஷ்டம் தீரவில்லை; "அவர்களும்தான் நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை என்று சொல்லிவிட்டார்களே?" என்றார் இன்ஸ்பெக்டர், அவரைவிடாமல்.

"அவர்களும் இல்லையென்றால் வேறு யாராயிருக்கும்? வந்து.... வந்து" என்று அவர் இழுக்க, "சரி, வந்தே சொல்!" என்று அவருடைய பிடரியையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, "எல்லோரும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?" என்றார் இன்ஸ்பெக்டர். ஒரே கல்லில் எல்லா மாங்காய்களையும் அடித்து வீழ்த்த!

அப்போது, "இல்லை, நான் சொல்கிறேன் உண்மையை!" என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் திரும்பினோம்.

"யார் அது? இங்கே வந்து சொல், அந்த உண்மையை!" என்று அந்தக் குரலுக்குப் பதில் குரல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

அவ்வளவுதான்; "இதோ இந்தத் தாய்தான் தூண்டி விட்டாள் அவனை!" என்று சொல்லிக் கொண்டே ஆற்றொணாத் துயரத்தால் அலமலந்து போயிருந்த தமிழ்மாறனின் தாயாரைக் கொண்டுவந்து, அதுதான் சமயமென்று அவருக்கு முன்னால் நிறுத்தினார் தமிழ்ப் புயல் தயாநிதி!

"இவளா!" என்றார் இன்ஸ்பெக்டர் வியப்புடன்.

"ஆம், இந்தத் தமிழ்த்தாய்தான் தூண்டிவிட்டாள் அந்தத் தமிழ்மகனை!" என்றார் அவர் மிடுக்குடன்.

இன்ஸ்பெக்டர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்.

"இப்போது தெரிந்துவிட்டது. இவனை யார் தூண்டி விட்டார்கள் என்று?"

"யார்?" என்றார் தயாநிதி.

"நீர்தான்; சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நீர்தான்! ஏறும் வண்டியில், உம்மை ஏமாற்ற நான் விரும்பவில்லை" என்றார் இன்ஸ்பெக்டர், அவரையும் வண்டியில் ஏற்றி.

அவர் சொன்னது உண்மைதான் என்றாலும் அந்த உண்மையைத் தமிழ் மக்கள் உணர்கிறார்களா, என்ன? "தமிழ்ப்புயல் தயாநிதி, வாழ்க தமிழ்ப்புயல் தயாநிதி வாழ்க!" என்று ஒருசாராரும், "எங்கள் தயாநிதியை விடுதலை செய்! எங்கள் தயாநிதியை விடுதலை செய்!"